அபு தாபி டெஸ்ட்- கேன் வில்லியம்சன் சதத்தால் பிரகாசமான நிலையில் நியூசிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டில் கேப்டன் கேன் வில்லியம்சனின் சதத்தால் நியூசிலாந்து 4-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. #PAKvNZ

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்சன் உடன் நிக்கோல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை இருவரும் மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டனர். கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து 104 ஓவர்கள் விளையாடி 272 ரன்கள் சேர்த்துள்ளது.

தற்போது வரை 198 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளை கூடுதலாக 100 ரன்களுக்கு மேல் அடித்து 300 ரன்கள் முன்னிலைப் பெற்றால் நியூசிலாந்து போட்டியை டிரா செய்யும், அல்லது வெற்றி பெறும். சதம் அடித்த கேன் வில்லியம்சன் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விடலாம் என்று நினைத்திருந்த பாகிஸ்தான் கனவை தகர்த்துள்ளார்.

முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *