அபு தாபி டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு 280 ரன்கள் வெற்றி இலக்கு- தப்பிக்குமா?

அபு தாபியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ

பாகிஸ்தான் – நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அசார் அலி (134), ஆசாத் ஷபிக் (104) ஆகியோரின் சதத்தால் 348 ரன்கள் குவித்தது.

74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கேன் வில்லியம்சன், நிக்கோல்ஸ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். நிக்கோல்ஸ் சதத்தை நெருங்கினார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 272 ரன்கள் சேர்த்திருந்தது. கேன் வில்லியம்சன் 139 ரன்னுடனும், நிக்கோல்ஸ் 90 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. கேன் வில்லியம்சன் 139 ரன்னிலேயே ஆட்டமிழந்தார். நிக்கோல்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இன்று 9 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. நிக்கோல்ஸ் 126 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

கேன் வில்லியம்சன் – நிக்கோல்ஸ்

ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து 279 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 280 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் சுமார் 81 ஓவர்கள் இன்று விளையாட வேண்டும். கடைசி நாளில் 81 ஓவரில் 280 ரன்கள் எடுப்பது எளிதான காரியம் அல்ல. அதேவேளையில் கடைசி வரை விக்கெட் இழக்காமல் இருந்தால் டிரா செய்யலாம்.

பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்றால் நியூசிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றிவிடும். இதனால் பாகிஸ்தான் குறைந்தபட்சம் போட்டியை டிரா செய்து தொடரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடி வருகிறது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *