அழுத்தம் தரும் வாழ்க்கை.

மனஅழுத்தம் நம்மை என்ன செய்யும்? என்ன வேண்டுமானாலும் செய்யும். தூக்கமின்மையில் தொடங்கி, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் என ஒவ்வொன்றாக பல பிரச்னைகளை அள்ளி அள்ளிக் கொடுத்து, இதய நோய்கள் வரை கொண்டு வந்து நிறுத்திவிடும். இது உடல்ரீதியான பிரச்னை என்றால், மனம் நொறுங்கிப்போய் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு உயிர் துறக்கக்கூட காரணமாகிவிடும். தீவிர மனஅழுத்தப் பிரச்னைக்கு சிகிச்சையைத் தவிர வேறு வழி இல்லை. எனவே, அவ்வப்போது, இந்தப் பிரச்னையை அடையாளம் கண்டுகொண்டு அதிலிருந்து மீvalikalண்டு வர முயற்சிக்க வேண்டும். அப்படித்தான் இதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதற்கு நம் சிந்தனையை வேறு பக்கம் திசை திருப்ப வேண்டும். அப்படி சிந்தனை திசை திரும்பும் நேரத்தில் நாம் செய்கிற பயிற்சிகள் நமக்குப் பிடித்ததாக, நம் கவலைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். 
இன்னும் சொல்லப் போனால் இளைய சமுதாயம் அதிகம் நோய்வாய்படுகின்றது. அதிக தலைவலி என்று சொல்லாத இளைய சமுதாயம் குறைவு. டென்ஷன் என்ற சொல், குழந்தைகளின் முதல் சொல் ஆகிவிட்டது. 30 வயதிற்குள் மாரடைப்பு என்பது சர்வ சாதாரணமாகி விட்டது. எந்த துறையில் இருப்போரும் மன அழுத்தத்துடனேயே இருக்கின்றனர். இன்றைய சூழல் இருக்கும் நிலை என்ன? அதிக எதிர்பார்ப்புகள் அநேகரிடத்தில் இருக்கின்றது. வேலை கொடுப்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். வேலை செய்பவரும் அதிகம் எதிர்பார்க்கிறார். இதனால் இருவருக்குமே ஏமாற்றம் ஏற்படுகின்றது.
இதே நிலை தான் பெற்றோர்கள், பிள்ளைகள் உறவிலும் உள்ளது. நடக்க முடியாத ஒன்றினை நடக்க வேண்டும் என்ற பிடிவாதம் பலரை நிம்மதியற்றவர்களாக ஆக்கி விடுகின்றது. மிக ஏழைகள் நிறைந்த நம் நாட்டில் நல்ல நிலையில் இருக்கும் அநேகருக்கும் சரி, சாதாரணமானவர்களுக்கும் சரி பணமே பத்தவில்லை. ஏழைகளின் நிலையினை என்ன சொல்வது? யாருமே ஆரோக்கியமான பேச்சுகளை பேசுவதில்லை. பண்பான பேச்சுகள் பஞ்சமாகி விட்டது. உரத்த குரலில் தடித்த வார்த்தைகளில் எங்கும் எதிலும் சண்டைதான். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையினை அலுவலகத்திலேயே வாழ்ந்து முடித்து விடுகின்றான். இவையெல்லாம் மனிதனை மனஅழுத்தம் உடையவனாக ஆக்கி விடுகின்றது. இந்த மன அழுத்தமே உடலில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.
மனஅழுத்தம் விரட்டும் சில வழிமுறைகள்!
முத்தான மூச்சுப்பயிற்சி!
பதற்றத்தோடும் பரபரப்பாகவும் இருக்கும் நேரத்தில் நாம் எப்படி மூச்சுவிடுவோம்… கவனித்திருக்கிறீர்களா? மேலோட்டமாக விடுவோம் அல்லது மூச்சை இழுத்து நிறுத்துவோம். இப்படி மூச்சை ஆழமாகவிடாமல் இருப்பது உடலுக்குப் பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும். இதற்கான மூச்சுப்பயிற்சியை எப்படிச் செய்வது? அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை முடிக்கொள்ளவும். கைகளை அடி வயிற்றில்படும்படி வைத்துக்கொண்டு, ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியேவிடவும். இப்படிச் செய்யும்போது அடிவயிற்றின் அசைவுகளை உணர முடியும். இதனால், கவனம் முழுவதும் அதில் குவிக்கப்பட்டு, உடலும் மனமும் தளர்வடைந்து இயல்புநிலையை அடையும்.  மேலும், இதய துடிப்பு சீராக இருப்பதால், ரத்த அழுத்தம் குறையும்; மனஅழுத்தம் நீங்கும். இந்தப் பயிற்சியை 5-ல் இருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம்.
பூமியோடு தொடர்பில் இருங்கள்!
6veliவீட்டில் இருந்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் ஒரு பயிற்சியே. கோடை காலத்தில் வெறும் கால்களால் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மைதானத்தில் ஒரு மணி நேரம் வரை நடவுங்கள் . காலை, மாலை வேளையில் வீசும் இதமான காற்று உங்கள் முகத்தில் மென்மையாகப் படட்டும். உங்கள் பாதங்கள் தரையில் படும்போது, `இந்த பூமியோடு தொடர்பில் இருக்கிறோம், நெருக்கமாக இருக்கிறோம்’ என பூமி என்கிற கிரகத்தின் உச்சியில் நிற்பதாக, நடப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். உங்களிடம் உள்ள இறுக்கமான மனோநிலை படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
புன்னகை மருந்து!
மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் (cortisol) ஹார்மோன் உங்கள் உடலில் அதிகமாகச் சுரக்கும். வயிறு குலுங்கச் சிரிக்கிறீர்களா? கார்ட்டிசால் சுரப்பு குறைந்து, மூளையைத் தூண்டுவதற்கு உதவும் எண்டார்பின் ஹார்மோன் சுரப்பு அதிகமாகும். எனவே, புன்னகை மிகச் சிறந்த மருந்து என்பதைப் புரிந்துகொள்ளுக்கள். இதற்காக நகைச்சுவை சினிமாக்கள், வீடியோக்களைப் பார்க்கலாம்; உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு மூட்டுபவர்களுடன் உரையாடலாம். மொத்தத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும். அவ்வளவுதான்.  சிரித்து சிரித்தே மன உளைச்சலை அகற்றிவிட முடியும்.
இசையால் இதமாகலாம்
எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. இசை கேளுங்கள் அல்லது வாய்விட்டு பாடுங்கள். உங்கள் இதயம் படபடவென்று அடித்துக்கொள்வதை அது கட்டுப்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள்.
சாக்லேட் நல்லது!
அளவாக இனிப்பு சாப்பிடுவது மனதுக்கு இதம் தரும். `இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை டார்க் சாக்லேட் (1.4 அவுன்ஸ்) சாப்பிடுவது, மன அழுத்தத்தைத் தூண்டும் ஹார்மோன்களைக் குறைக்க உதவும்’ என்கிறது ஓர் ஆய்வு. சாக்லேட்டைச் சாப்பிடும்போது வேறு எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள்; அதன் ருசியை, இனிமையை அனுபவித்து ருசியுங்கள். இதுகூட ஒரு மனப்பயிற்சிதான். மன ஆரோக்கியம் காக்க சாக்லேட்டும் உதவும்.  
கிரீன் டீ  அருமையானது!
கிரீன் டீயில் உள்ள அமினோ அமிலம், தியானின் (Thianine) ஆகியவை மூளையை அமைதிப்படுத்தும் வல்லமை கொண்டவை. அதிகம் குடித்தாலும் பல்வேறு பிரச்னைகள் உருவாகலாம். எனவே, ஒரு நாளைக்கு நான்கு கப்புக்கு மிகாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இப்படி ஆறு வாரங்களுக்குத் தொடர்ந்து கிரீன் டீ குடித்தால், அது மனஅழுத்தத்துக்குக் காரணமாகும் கார்ட்டிசால் ஹார்மோன் சுரப்பை குறைக்கும் என்கிறது ஓர் ஆய்வு. 
மந்திர வாசகம் முக்கியம்!
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ள உதவும் சில நல்ல வாசகங்களை உங்களுக்கு நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த சிறந்த மேற்கோள்களை எழுதிவைத்துக்கொள்ளுங்கள். அதை உங்களுக்குள்ளேயே அடிக்கடி சொல்லிப் பாருங்கள். உதாரணமாக, `என்னால் முடியும் ’, `நடப்பதெல்லாம் நன்மைக்கே’ போன்ற எப்படிப்பட்ட வாசகமாகவும் அது இருக்கலாம். இந்த வாசகங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மனதுக்கு சக்திதரும் மந்திரங்களாக அவை மாறும். விரைவில் நல்ல மாற்றம் தெரியும்.
இவ்வளவு சொன்னாலும்   சிறிது மனஅழுத்தம் இல்லாவிடில் மனிதன் முழு சோம்பேறி ஆகி விடுவான். நேரத்திற்கு எழ வேண்டும். நேரத்தில் செய்ய வேண்டும், கடமைகளை ஆற்ற வேண்டும் என்ற ஒரு பொறுப்புணர்ச்சி அளவான மன அழுத்தத்தினை கொடுக்கவே செய்யும்.
சிவமணி