ஆபாசப் படங்களை அழித்த பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு மகன் வழக்கு!

கிடைத்தற்கரிய தொகுப்புகளாக சேமித்து வைத்திருந்த ஆபாசப் படங்களை அழித்து விட்டதாக அமெரிக்காவில் ஒருவர் தனது பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அமெரிக்காவில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால் விவாகரத்து பெற்ற நடுத்தர வயது நபர் பெட்டி, படுக்கைகளை மூட்டைக்கட்டி கொண்டு, மிச்சிகன் மாநிலம், கிரான்ட் ஹேவன் பகுதியில் உள்ள தனது பெற்றோரின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டில் தஞ்சம் அடைந்தார்.

அவர்களின் ஆதரவில் தங்கி இருந்த அந்நபர், பின்னாளில் இன்டியானா மாநிலத்துக்கு இடம்பெயர்ந்தார். பெற்றோர் வீட்டில் அவர் விட்டுச் சென்ற பொருட்கள் எல்லாம் அவரது புதிய இருப்பிடத்துக்கு அனுப்பப்பட்டபோது 12 அட்டை பெட்டிகள் வந்து சேராததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தனது வாலிபகாலத்தில் இருந்து சிறுகச்சிறுக சேகரித்து வைத்திருந்த கிடைத்தற்கரிய ஆபாசப் படங்களின் வி.சி.டி. மற்றும் சி.டி., டி.வி.டி. தொகுப்புகள் என்னவாயிற்று? என்று பெற்றோரிடம் ‘இமெயில்’ மூலம் அவர் விசாரிக்க, எதிர்முனையில் இருந்து வந்த பதில் அவரை ஆத்திரப்படுத்தியது.

அந்த 12 பெட்டிகளில் இருந்தவற்றை எல்லாம் நானும் உன் அம்மாவும் சேர்ந்து அழித்து விட்டோம் என்று அவரது தந்தை பதில் அனுப்பி இருந்தார்.

உனது உடல்ரீதியான, மனரீதியான ஆரோக்கியத்தின் மீது நாங்கள் அக்கறை வைத்துள்ளதால் உன்னிடம் இருந்த ’அருவெறுக்கத்தக்க குப்பையை’ அழித்துவிட நாங்கள் தீர்மானித்தோம் என மகனுக்கு அனுப்பிய பதிலில் தந்தை குறிப்பிட்டிருந்தார்.

இதனால், தனது பிரியத்துக்குரிய ‘ஆபாசப் பட நூலகம்’ அழிக்கப்பட்டதை அறிந்து அவர் மேலும் ஆவேசம் அடைந்தார். தனக்கு சொந்தமான சுமார் 29 ஆயிரம் டாலர் மதிப்புள்ள சொத்துகளை பெற்றோர் அழித்து விட்டதாக ஒட்டாவா நகர ஷெரிப் அலுவலகத்தில் அவர் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஷெரீப் அலுவலகம் முன்வரவில்லை.

இதையடுத்து, கிடைத்தற்கரிய தொகுப்புகளாக சேமித்து வைத்திருந்த ஆபாசப் படங்களை அழித்து விட்டதாக தனது பெற்றோரிடம் 86 ஆயிரம் டாலர் இழப்பீடு கேட்டு வழக்கு மிச்சிகன் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த செய்தியை சமீபத்தில் வெளியிட்டுள்ள அமெரிக்க ஊடகங்கள், வழக்கு தொடர்ந்த நபர் மற்றும் அவரது பெற்றோரின் பெயரை மட்டும் வெளிப்படுத்தவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *