இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் – காதலியை கடத்தி திருமணம் செய்யும் காதலன்

அசோக் ஆர் நாத் இயக்கத்தில், ஆதவா, அவந்திகா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இராஜாவின் பார்வை இராணியின் பக்கம் படத்தின் விமர்சனம். #RajavinPaarvaiRaniyinPakkam

நாயகன் ஆதவாவும், நாயகி அவந்திகா மோகனும் ஏழு மாதமாக காதலித்து வருகிறார்கள். சிறு பிரச்சனையால் இவர்கள் இரண்டு பேரும் பிரிந்து விடுகிறார்கள். இந்நிலையில், நாயகிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இதையறிந்த ஆதவா, அந்த திருமணத்தை தடுத்து நிறுத்த முடிவு செய்கிறார்.

இதற்காக தன் நண்பர் துணையுடன் ஒரு தாதா கும்பலுடன் சென்று அவந்திகாவை கடத்தி வர திட்டம் போடுகிறார். அதன்படி தாதா கும்பலுடன் ஒரு வண்டியில் பயணிக்கிறார் ஆதவா. இறுதியில் நாயகன் ஆதவா, நாயகி அவந்திகாவை கடத்தி திருமணத்தை நிறுத்தினாரா? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஆதவா, சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் அழகாக இருக்கிறார். ஆனால், நடிப்புதான் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறது. நடிப்பில் கவனம் செலுத்தினால் இனிவரும் படங்கள் சிறப்பாக அமையும். நாயகியாக நடித்திருக்கும் அவந்திகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். 

நண்பர்களாக வருபவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பல இடங்களில் இவர்கள் செய்யும் காமெடி கடுப்பாக இருக்கிறது. காதலியை கடத்தி திருமணம் செய்யும் கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அசோக் ஆர் நாத். ஆனால், திரைக்கதையில் தான் கோட்டை விட்டிருக்கிறார். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்க தெரியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது.

லியாண்டர் லி மார்ட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். பின்னணியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். ஜே.எஸ்.கேவின் ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘இராஜாவின் பார்வை இராணியின் பக்கம்’ சுமார் ரகம்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *