உலககோப்பை ஹாக்கி- இந்தியா கால்இறுதிக்கு தகுதி பெறுமா? கனடாவுடன் நாளை மோதல்

Please log in or register to like posts.
News

உலககோப்பை ஹாக்கி போட்டியில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் இந்தியா, கனடாவுடன் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018

புவனேஸ்வர்:

14-வது உலக கோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது.

16 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அணி தனது முதல் ‘லீக்’ ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.

இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் கனடாவுடன் நாளை மோதுகிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. ‘பி’ பிரிவில் இந்தியா, பெல்ஜியம் தலா 4 புள்ளிகளுடனும், கனடா, தென்ஆப்பிரிக்கா தலா 1 புள்ளியுடனும் உள்ளன.

கோல் வித்தியாசத்தில் இந்தியா +5 என்ற விகிதத்தில் முதல் இடத்தில் உள்ளது. பெல்ஜியம் கோல் வித்தியாசத்தில்+1 என்ற நிலையில் உள்ளது. இதனால் நாளைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் கால்இறுதிக்கு நேரடியாக தகுதிபெறும் வாய்ப்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக 5 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெல்ஜியம்- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தின் முடிவை பொறுத்து இந்தியா விளையாடும் சூழ்நிலை இருப்பதால் அது சாதகமாக இருக்கும்.

ஒரு வேளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பெல்ஜியம் அணி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதற்கு ஏற்ப இந்தியா விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மாறாக 2-வது அல்லது 3-வது இடத்தை இந்தியா பிடித்தால் 2-வது சுற்றான கிராஸ் ஓவர் முறையில் விளையாட வேண்டும்.

கோல் வித்தியாசத்தில் இந்தியா வலுவாக இருப்பதால் நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற்று நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. #worldcuphockey2018

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *