எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணி: விராட் கோலி

பெர்த் டெஸ்டில் எங்களைவிட சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியானது என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #AUSvIND

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:-

இந்த டெஸ்டில் நாங்கள் அணியாக சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். ஆஸ்திரேலிய அணி எங்களைவிட பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது. அந்த அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. இந்த ஆடுகளத்தில் இது அதிகமான ரன்னே. ஆஸ்திரேலியா வெற்றிக்கு தகுதியான அணியே.

நாங்கள் நம்பிக்கையுடன் விளையாடியபோது ஆஸ்திரேலிய பவுலர்கள் எங்களுக்கு இடைவிடாது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் அதில் மிகுந்த திறமையுடன் செயல்பட்டனர்.

ஆடுகளத்தை (பிட்ச்) பார்த்தபோது நாங்கள் ஜடேஜாவை பற்றி சிந்திக்கவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர் நாதன் லயன் சிறப்பாக பந்து வீசினார். சுழற்பந்து வீரர் அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் ஒருபோதும் யோசிக்கவில்லை. 4 வேகப்பந்து வீரர்கள் போதுமானது என்று கருதுதினோம்.

நாங்கள் விரும்பிய முடிவை பெறாததால் ஆட்டத்திறன் குறித்து சொல்வது பொருத்தமற்றது. அடுத்த டெஸ்டில் கவனம் செலுத்துவதுதான் இனி நோக்கமாக இருக்கும்.

எனக்கு கொடுக்கப்பட்ட முடிவு (சர்ச்சைக்குரிய கேட்ச்) குறித்து ஆடுகளத்தில் எடுக்கப்பட்டது. அது அங்கேயே முடிந்துவிட்டது. இதற்கு மேல் ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வெற்றி குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் டிம்பெய்ன் கூறும்போது, “இந்த வெற்றியால் நிம்மதி அடைகிறோம். எங்களது வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *