ஏமாற்றிய நபர் சுவிஸ்ஸில் கைது

பிரித்தானிய பெண்மணி ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரிடம் இருந்து பெருந்தொகையை ஏமாற்றி சுவிட்சர்லாந்தில் தலைமறைவாக வாழ்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்மணி அளித்த புகாரின் அடிப்படையில் சர்வதேச அளவில் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சூரிச் மாகாண பொலிசார் அவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

45 வயது மதிக்கத்தக்க பிரித்தானியரான அவர் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த நபர் கடந்த 2 ஆண்டுகளாக பொலிசாரால் தேடப்பட்டு வந்துள்ளார். முதலில் போலியான முதவரியுடன் ஸ்பெயின் நாட்டிலும் பின்னர் சுவிட்சர்லாந்திலும் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

ரகசிய உளவாளி மற்றும் வங்கி அதிகாரி என பல்வேறு பெயர்களில் மோசடியில் ஈடுபட்ட குறித்த நபர் பிரித்தானிய பெண்மணி ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி சுமார் ஒரு மில்லியன் பிராங்க்ஸ் தொகையை ஏமாற்றியுள்ளார்.

மட்டுமின்றி அவர் மீது சுமார் 20 மோசடி வழக்குகளும் பிரித்தானிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கைது நடவடிக்கையானது தேசிய மற்றும் சர்வதேச அளவில் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் என சூரிச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 200,000 பவுண்ட்ஸ் தொகை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஸ்பெயின் நாடு சிறையில் இருந்த குறித்த நபர் பின்னர் விடுதலையானார்.

கடந்த மே மாதம் முதல் அவர் ஜெனீவாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தது பொலிசாருக்கு தெரியவந்ததை அடுத்தே கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *