ஒரே போட்டியில் இரண்டு சாதனைகளை படைக்க காத்திருக்கும் விராட் கோலி

உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

நாட்டிங்காம்:

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியின் 18-வது ‘லீக்‘ ஆட்டம் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது.

இதில் விராட்கோலி தலைமையிலான இந்தியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது.

தொடக்க வீரர் தவான் காயம் அடைந்ததால் ரோகித் சர்மாவுடன் லோகேஷ் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குகிறார். ராகுலின் இடமான 4-வது வரிசையில் விளையாட போகும் வீரர் யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக்குக்கு 11 பேர் கொண்ட அணியில் வாய்ப்பு கிடைக்குமா, என்று எதிபார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டத்தில் விராட்கோலி 11 ஆயிரம் ரன்னை கடப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். அதற்கு அவருக்கு இன்னும் 57 ரன்களே தேவை.

11 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை கோலி பெறுவார். சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். தெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கு பிறகு 11 ஆயிரம் ரன் எடுக்கும் 3-வது இந்தியர் என்ற சாதனையை பெறுவார்.

30 வயதான கோலி 229 போட்டியில் 221 இன்னிங்சில் விளையாடி 10,943 ரன் எடுத்துள்ளார். சராசரி 59.47 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். 41 சதமும், 50 அரை சதமும் எடுத்துள்ளார். இந்த போட்டியில் கோலி சதம் அடித்தால் நியூசிலாந்துக்கு எதிராக 9 சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய வீரர் சேவாக் சாதனையை சமன் செய்வார்.

நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.

அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வங்காள தேசத்தை 2 விக்கெட்டிலும், 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *