கமல்ஹாசனை நோக்கி செருப்பு வீச்சு!

மதுரை திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்ட மேடைக்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நோக்கி காலணி வீசப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது தீவிரவாதம் குறித்து பேசினார்.

அதில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து எனவும், அவர் தேச தந்தை காந்தியை படுகொலைச் செய்த நாதுராம் கோட்சே என கூறியிருந்தார்.

கமல்ஹாசனின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், பிரதமர் மோடி துவங்கி சினிமா பிரபலங்கள் பலரும் அவருடைய கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.

இதனால் 2 நாட்களாக கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்தார். அவருடைய வீட்டிற்கும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு போட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், அரவக்குறிச்சியில் தான் பேசியது குறித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பாஜக கட்சியை சேர்ந்த 10க்கு ம் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென கமல்ஹாசனை நோக்கி காலனியை வீசியெறிந்தனர்.

இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *