காற்று தூய்மைக்கேடு : 15 மாணவர்கள் வாந்தி- சுவாசப் பிரச்சனையில் அவதி!

பாசீர் கூடாங், ஜூன்.20-  காற்று தூய்மைக்கேடு காரணத்தினால் தாமான் மாவார் சமயப் பள்ளியைச் சேர்ந்த 15 மாணவர்கள் வாந்தி – சுவாசப் பிரச்னையை எதிர்நோக்கியுள்ளனர் என பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு படை தலைவர் இப்ராஹிம் ஓமார் தெரிவித்துள்ளார்.

இந்த காற்று தூய்மைக் கேடு சம்பவம் குறித்து எங்களுக்கு இன்று மாலை 3.39 மணியளவில் அழைப்பு வந்தது. இதன் தொடர்பில் இரு அவசர சேவை உதவி (இஎம்ஆர்எஸ்) பிரிவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தனர்.

சம்பவ இடத்தை அடைந்ததும் அங்கு காற்று தூய்மைக்கேடு நிகழ்ந்துள்ளது உறுதி செய்யப்பட்டது. அப்பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் வாந்தி மற்றும் சுவாச பிரச்னையால் பாதிப்புற்றிருந்தனர்.

அவர்களுக்கு அங்கு அவசரசிகிச்சை உடனைடியாக வழங்கப்பட்டது. 5 மாணவர்கள்  சிகிச்சைக்காக சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் விவரித்துள்ளார்.

இதற்கிடையே இந்த சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரனை முடிவுற்றதும் இதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என ஜொகூர் மாநில சுகாதார பிரிவு இயக்குனர் டாக்டர் செலாஹுடீன் அப்துல் அஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் இங்குள்ள கிம் கிம் ஆற்றில் நச்சு கலந்ததினால் காற்று தூய்மைக்கேடு ஏற்பட்டு சுமார் 4,000 பேர்  பாதிக்கப்பட்டனர். இதனால் பாசீர் கூடாங் மாவட்டத்தில் 111 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

The post காற்று தூய்மைக்கேடு : 15 மாணவர்கள் வாந்தி- சுவாசப் பிரச்சனையில் அவதி! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *