குடும்ப நண்பரை இழந்துவிட்டேன் – வடிவேலு வேதனை

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு, நடிகர் வடிவேலு குடும்ப நண்பரை இழந்து விட்டேன் என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் 100க்கும் அதிமான படங்களில் நடித்தவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. வடிவேலுடன் பின்லேடன் முகவரி கேட்கும் காமெடி பிரபலம். `பேய் மாமா’ படப்பிடிப்புக்காக குமுளி போயிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.  தயாரிப்பு நிர்வாகியாக தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த கிருஷ்ண மூர்த்தி 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினார். 

‘குழந்தை இயேசு’ படத்தில் நடிகராக அறிமுகமானவர், நாயகன், நான் கடவுள், தவசி, எல்லாம் அவன் செயல் படங்களின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். மறைந்த கிருஷ்ணமூர்த்தி, சினிமாவில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரின் மகள் மகேஸ்வரியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பிரசாந்த், கவுதம் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். 

கிருஷ்ணமூர்த்தி பற்றி நடிகர் வடிவேலு கூறியிருப்பதாவது:- ரொம்ப ரொம்ப நல்ல மனிதர். கிருஷ்ண மூர்த்தியோட மனைவி, ரெண்டு பசங்க எல்லோரும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிவிட்டு போவாங்க. அந்த அளவுக்கு குடும்ப நண்பர் அவர். இப்போது அவரோட குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியவில்லை. 

கிருஷ்ண மூர்த்தி, புரொடக்ஷன் மேனேஜராக இருந்தார். நான்தான் முதன்முதலாக ‘தவசி’ படத்துல அவரை நடிக்க வைத்தேன். பின்னர் ஏகப்பட்ட படத்துல என்கூட நடிச்சிருக்கார். நாங்கள் 2 பேரும் நடிக்க போற காட்சியை பற்றி ஷூட்டிங்குக்கு முந்தைய நாள் என் ஆபீஸ்ல டிஸ்கஷன் செய்வோம். அப்போ எவ்வளவு காமெடியான கான்செப்ட் சொன்னாலும், லேசுல ரசிக்க மாட்டார். 

இன்னும் அதில் சுவாரசியம் சேர்க்கணும்னு நினைப்பார். அப்புறம் குபீர்னு தரையில உருண்டு உருண்டு சிரிப்பார். இனிமேல் நான் நடிக்க இருக்கும் படத்துல எல்லாம் அவருக்கும் ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருக்கேன். அது அவருக்கும் நல்லாவே தெரியும். இப்போது திடீர் என்று இப்படி ஆகிவிட்டது’. இவ்வாறு வடிவேலு கூறியிருக்கிறார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *