குறைந்தப் பட்ச சம்பள விவகாரம்; குலசேகரனின் தூங்காத இரவுகள்!

கோலாலம்பூர், செப்.14- பி-40 எனப்படும் வறுமை கோட்டில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் சிரமத்தை குறைப்பதற்காக அப்பிரிவினரின் குறைந்தப் பட்ச வருமானத்தில் ரிம.50-ஐ பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அதிகரித்தாலும் அதனால் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு இடையே தம்மால் தூங்கக் கூட முடியவில்லை என்கிறார் அமைச்சர் குலசேகரன்.

அதிகரிக்கப்பட்ட அந்தத் தொகையால், தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீரும் வாய்ப்பு அறவே இல்லை. பி40 பிரிவினரை அவமானப்படுத்தும் வகையில் அந்தச் சம்பள அதிகரிப்பு உள்ளதாக பல தரப்பினர் பக்காத்தான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஆனால், பி40 பிரிவினருக்கு உதவும் ஒரே நோக்கத்தில் தான் அரசாங்கம் அந்தச் சம்பள உயர்வை அறிவித்ததாகவும், அப்பிரிவினரை சிறுமைப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அந்தத் தொகையை அறிவிக்கவில்லை என்று மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் கூறினார்.

பக்காத்தான் கூட்டணி தங்களின் தேர்தல் கொள்கை அறிக்கையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப் படும் என்றும், அறிவிக்கப் பட்டுள்ள ரிம.50 சம்பள உயர்வு, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் இறுதியான குறைந்தப் பட்ச சம்பள உயர்வுக்கான அறிவிப்பு அல்ல என்றும் அவர் விளக்கினார்.

“பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு கால ஆட்சிக் காலத்தின் இறுதியில், குறைந்தப் பட்ச சம்பளம் அதிகரிக்கப் படும். எங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை வழங்குங்கள்.

“குறைந்தப் பட்ச சம்பளம் குறித்து பல்வேறான கேள்விகள் எழுப்பப் படுகின்றன. இப்பிரச்சனையை எவ்வாறு களைவது என்று நினைத்து நினைத்து, என்னால் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் தூங்க முடியவில்லை” என்று குலசேகரன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறைந்தப் பட்ச வருமானத்தை ஒரேடியாக ரிம.1500-ஆக உயர்த்துவதற்கு முன்னர், நாட்டின் பொருளாதார மற்றும் நிதி சூழ்நிலையை நன்கு ஆராய வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு உண்டு என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

2018-ஆம் ஆண்டில் இரண்டாவது காலாண்டில், நாட்டின் பொருளாதாரம் மெதுவாக விரிவடைந்து வருவதாக தேசிய வங்கியின் (பாங்க் நெகாரா) அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக குலசேகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

The post குறைந்தப் பட்ச சம்பள விவகாரம்; குலசேகரனின் தூங்காத இரவுகள்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *