கோலாலம்பூர், ஏப்ரல்.16- கேமரன்மலை நாடாளுமன்றத் தொகுதி மஇகாவுக்குத்தான் என்று உறுதியாகி விட்ட நிலையில், மைபிபிபி  கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ்  கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருப்பதாக கூறப்பட்டது.

 கேமரன் மலைக்குப் பதிலாக சிகாம்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட கேவியசிற்கு தேசிய முன்னணி தலைமை வாய்ப்பளித்ததை அவர் நிராகரித்துள்ளார்.  கேமரன் மலைத் தொகுதியில் கடந்த 4  ஆண்டுகளாக தொடர்ந்து இரவு பகல் பாராமல் உழைத்திருக்கிறேன். எனவே வேறு எந்தத் தொகுதியையும்  தாம் ஏற்கும் நிலையில் இல்லை என்று கேவியஸ் கூறியுள்ளார்.

அதேவேளையில் சிகாம்புட் தொகுதியில் போட்டியிட இப்போது வாய்ப்பளிப்பதற்குப் பதிலாக தஏசிய முன்னணி  4 ஆண்டுகளுக்கு முன்பே அந்த வாய்ப்பை அளித்திருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் கேமரன்மலையை இலக்காக வைத்து நான் போட்ட உழைப்பை,  சிகாமட்டில் போட்டிருப்பேன் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிகாம்புட் தொகுதிக்கு மாறும்படி எனக்கு அறிவுறுத்தப்பட்ட போது நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னைப் பொறுத்தவரை அத்தகைய  மாற்றத்தை நான் ஏற்கமாட்டேன் என்றார் அவர்.

தேசிய முன்னணி தலைமைத்துவம்  தமக்கு அளித்த வாக்குறுதிப் படி நடக்கவில்லை என்பதால் கேவியஸ்  கடும் அதிருப்தி அடைந்திருக்கும் நிலையில்,  அடுத்த சில நாள்களில் நடக்கும் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவு அறிவிக்கப்படலாம் என்று   வட்டாரங்களை மேற்கோள் காட்டி இணைய ஊடகச் செய்தி ஒன்று கூறியது. தேசிய முன்னணியில் இருந்து சில காலம் விலகி இருக்க, மைபிபிபி முடிவு எடுத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என்றும் கூறப்படுகிறது.