கொலைப்பழியால் ஊரைவிட்டு வெளியேறிய ஒடியன் திரும்பினாரா? – ஒடியன் விமர்சனம்

கேரளாவின் மலபார் பகுதியில் வாழ்ந்த ஒடியனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்காத அந்த காலத்தில், ஒடியன் என்று அழைக்கப்படுபவர்கள், விலங்குகளை போல வேடம் தரித்துக் கொண்டு ஒருவரை பயம்கொள்ளச் செய்வதையே தொழிலாக கொண்டுள்ளனர். அந்த வகையில் கடைசி ஒடியனாக வருகிறார் மோகன்லால்.

மோகன் லாலுக்கு தன்னுடன் பள்ளியில் படித்த மஞ்சு வாரியருடன் காதல் வருகிறது. ஆனால் தனது காதலை மஞ்சு வாரியரிடம் சொல்லாமல் மறைக்கிறார். மறுபுறம் மஞ்சு வாரியரிக் முறைமாமனான பிரகாஷ்ராஜ், மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறார். அத்துடன் கண் பார்வையற்ற மஞ்சு வாரியரின் தங்கையையும் அடைய நினைக்கிறார்.

பிரகாஷ்ராஜின் ஆசைக்கு முட்டுக்கட்டை போடும் மஞ்சு வாரியர், நரேனை திருமணம் செய்து கொள்கிறார். திருமணமான சில காலங்களில் நரேன் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்.

அதேபோல் மஞ்சு வாரியரின் பார்வை தெரியாத தங்கையின் கணவரும் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். இந்த இரண்டு மரணங்களுக்கும் மோகன்லால் தான் காரணம் என்று மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நினைக்கிறார்கள்.

இதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டு சென்றுவிடுகிறார் மோகன்லால், மஞ்சு வாரியரின் மகளின் மூலம் உண்மைகளை அறிந்து சொந்த ஊருக்கு திரும்பி அந்த இருவிரன் கொலைக்கும் காரணமானவரை எப்படி பழிதீர்க்கிறார்? மோகன் லால் தனது சுயரூபத்தை காட்டினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

மோகன் லால் ஒடியன் கதாபாத்திரமாக சிறப்பாக நடித்திருக்கிறார். இளம்வயது மற்றும் முதிர்ச்சியான தோற்றம் என ரசிக்கும்படியாக நடித்துள்ளார். குறிப்பாக ஒடியன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

மஞ்சு வாரியர் மோகன் லால் மீதான காதல், தனது வாழ்க்கை, தனது தங்கையின் வாழ்க்கை என இரண்டையும் தொலைத்துவிட்டு தவிக்கும் கதாபாத்திரத்தில் பக்குவம் காட்டுகிறார். பிரகாஷ் ராஜ் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். குறிப்பாக இந்த படத்தில் கருத்த தோளுடன் வரும் பிரகாஷ் ராஜின் தோற்றம் பேசும்படியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. மற்றபடி இன்னோசென்ட், சித்திக், மனோஜ் ஜோஸி, நந்து, நரேன் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் படத்தின் ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றனர்.

வித்தயாசமான கதையை தொட்டதற்காகவே இயக்குநர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனனுக்கு பாராட்டுக்கள். கதையும், கதைக்கு அச்சாணியாக மோகன் லால், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர் என பிரபலங்கள் இணைந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளை இயக்குநர் பூர்த்தி செய்யவில்லை என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு இன்னமும் மெனக்கிட்டிருக்கலாம்.

எம்.ஜெயச்சந்திரன், சாம்.சி.எஸ் இசையில் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஷாஜி குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.

மொத்தத்தில் `ஒடியன்’ பலமில்லை. #Odiyan #OdiyanReview #MohanLal #ManjuWarrier

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *