கோப்பை கனவில் இருக்கும் இங்கிலாந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் ‘இன்ஜூரி லிஸ்ட்’

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களுக்கு தொடர்ந்து காயம் ஏற்பட்டு வருவதால், அந்த அணி சிக்கலை எதிர்நோக்கியுள்ளது.

இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதுவரை உலகக்கோப்பையை வெல்ல முடியாமல் இருக்கும் இங்கிலாந்து, கடந்த உலகக்கோப்பைக்குப்பின் அணியை வலுவாக கட்டமைத்தது. கடந்த நான்கு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடம் வகிக்கிறது.

அந்த அணி ஏராளமான ஆல்-ரவுண்டர்களை கொண்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ், மார்க் வுட், ஜாப்ரா ஆர்சர், மொயீன் அலி என ஆல்-ரவுண்டர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக பீல்டிங் பயிற்சி மேற்கொண்டபோது அந்த அணியின் கேப்டன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.

நேற்றைய போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், அவரது 4-வது ஓவரை வீசும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு மாற்று வீரராக பீல்டிங் செய்ய வந்த ஜாப்ரா ஆர்சர் பீல்டிங் செய்யும்போது காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்குப்பின் மீண்டும் களம் இறங்கினார். இருவரும் தொடர்ச்சியாக 140 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடியவர்கள் என்பதால் இங்கிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல் சுழற்பந்து வீச்சாளரான லியாம் டாசனின் வலது கையில் உள்ள மோதிர விரலின் தோல் கிழிந்தது. நேற்று ஒரேநாளில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

மார்க் வுட்டுக்கு முன்னெச்சரிக்கை காரணமாக ஸ்கேன் செய்து பார்க்கப்படுகிறது. இலேசான காயமாக இருந்தால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆர்சருக்கு லேசான காயம்தான். அதுகுறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மருத்துக்குழு தெரிவித்துள்ளது. 15 பேரில் நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது, அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *