சம்பளப் பணம் கொள்ளை: பொய்ப் புகார்  செய்து மாட்டிக் கொண்ட முதலாளிகள்!

செர்டாங், ஜன.12- ஒரே நிறுவனத்தின் முதலாளிகளான இருவர், தங்களின் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை கொடுப்பதை தவிர்ப்பதற்காக, கொள்ளை அடிக்கப் பட்டதாக பொய்ப் போலீஸ் புகார் கொடுத்து மாட்டிக் கொண்டுள்ளனர்.

அவ்விரு முதலாளிகளும், தங்களின் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளப் பணத்தை தங்களின் செலவுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டனர். அதனைத் தொடர்ந்து, அவ்விருவரில் ஒருவர், அந்தச் சம்பள பணம், கொள்ளை போய் விட்டதாக போலீசில் புகார் செய்தார்.

கடந்த வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு, தனது பணத்தை இருவர் கொள்ளையடித்துச் சென்றதாக, அந்த முதலாளிகளில் ஒருவரான 20 வயதிற்கு உட்பட்ட ஆடவர், போலீசில் புகார் செய்தார் என்று செர்டாங் ஓசிபிடி துணை ஆணையர் இஸ்மாடி பொர்ஹான் கூறினார்.

“அருகிலிருந்த வங்கி ஒன்றிலிருந்து ரிம.160,000-யை தாம் எடுத்துக் கொண்டு வெளியேறும் வேளையில், ஹோண்டா ஏக்கோர்ட் ரக காரில் வந்த இருவர், தன்னிடமிருந்து அந்தப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக அவர் போலீஸ் புகார் செய்தார்.

“இருந்த போதிலும், அந்த விசாரணையில் அவர் பகிர்ந்துக் கொண்ட சில விவரங்கள் குறித்து எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, நாங்கள் மேலும் சில விசாரணைகளை மேற்கொண்டோம்” என்று அவர் சொன்னார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணையை தொடர்ந்து, அவ்விருவரும், தங்களின் சொந்தக் கடன்களை செலுத்துவதற்காக அப்பொய்யான போலீஸ் புகார் செய்ததாக ஒப்புக் கொண்டனர் என்று இஸ்மாடி கூறினார்.

தங்களது தொழிலாளர்களை முட்டாளாக்க அவர்கள் திட்டமிட்டனர் என்றும், கொள்ளை அடிக்கப் பட்டதாக கூறப்பட்ட அந்தத் தொகையில், ரிம. 49,000 அவர்களின் காரிலிருந்து மீட்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். மீதப் பணத்தை அவர்கள் செலவு செய்து விட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“பொய் போலீஸ் புகார்கள் கொடுப்பதை பொதுமக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அந்தப் பொய்யான புகார்களால போலீசாருக்கு அநாவசிய தொல்லைகள் ஏற்படுகின்றன. நடக்காத சம்பவத்திற்கு விடை காண்பதற்காக, வரி பணம் செலுத்துபவர்களின் பணமும் விரயமாகிறது” என்று அவர் சுட்டிக் காட்டினார்.

The post சம்பளப் பணம் கொள்ளை: பொய்ப் புகார்  செய்து மாட்டிக் கொண்ட முதலாளிகள்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *