கோலாலம்பூர், டிசம். 07- தொகுதி வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அம்சத்தின் அடிப்படையில் பகாங் மந்திரி புசார் வான் ரோஸ்டி வான் இஸ்மாயிலை ஜெலாய் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்ய, தேர்தல் ஆணையத்திற்கு பெடரல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் எனக் கோரி இடை மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய ஜசெகவைச் சேர்ந்த எம். மனோகரன் ஆலோசித்து வருகிறார்.
கடந்த மே மாதம் நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் போது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததால் எம்பி பதவியில் இருந்து மஇகாவைச் சேர்ந்த சி.சிவராஜை கடந்த வாரம் தேர்தல் நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது.
இத்தொகுதியில் சிவராஜ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுக்கப்பட்டிருப்பதை சிவராஜை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி கண்ட ஜசெக வேட்பாளர் மனோகரன் சந்தேகங்களுக்கு இடமின்றி நிரூபித்திருப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓராங் அஸ்லி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதில் ஜெலாய் சட்டம்ன்ற தொகுதி உறுப்பினர் வான் ரோஸ்டியும் ஈடுபட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக சிவராஜ் மேல் முறையீட்டு நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யவிருக்கும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தம்முடைய சட்ட ஆலோசனைக் குழுவுடன் தாம் கலந்து ஆலோசித்து வருவதாக மனோகரன் சொன்னார். மேல்முறையீடு செய்வதற்கு சிவராஜுக்கு டிசம்பர் 14ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது.
அதேவேளையில், லஞ்சம் கொடுக்கப்பட்டதில் ரோஸ்டியும் சிவராஜும் சம்பந்தப்பட்டிருந்தது தேர்தல் நீதிமன்றத்தில், நிரூபிக்கப்பட்டிருப்பதால் மேல்முறையீட்டு நீதிமன்றம் ரோஸ்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் இடைமனுவைச் செய்ய விரும்புவதாக மனோகரன் சொன்னார்.
மேல்முறையீட்டு வழக்கிலும் சிவராஜ் தோல்வி காண்பாரேயானால், அடுத்து பகாங் மந்திரி புசார் ரோஸ்டியும் ஜெலாய் தொகுதி உறுப்பினர் அந்தஸ்தை இழக்க வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது.
i
The post சிவராஜை அடுத்து, பகாங் மந்திரி புசாரை குறிவைக்கிறார் ஜசெக மனோகரன்! appeared first on Vanakkam Malaysia.