சுவிட்சர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புராதன ரெஃப்ரிஜரேட்டர்கள்

சுவிட்சர்லாந்தின் புதை பொருள் ஆய்வாளர்கள் Augusta Raurica என்னும் ரோம தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மர்மக் குழிகளில் பனிக்கட்டியைப் போட்டு மதுபான வகைகளை சேமித்து வைத்தால் மூன்று மாதம் அளவும் அவை கெட்டுப்போகாமல் இருப்பதை வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளனர்.

இதனால் இந்த நான்கு மீற்றர் ஆழக் குழிகள் புராதன காலத்தில் ரெஃப்ரிஜரேட்டர்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.

பேஸல் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Peter-Andrew Schwarz தலைமையிலான ஒரு குழு, ஏப்ரல் மாதத்தில் இந்த குழிகளுக்குள் வேறு சில பொருட்களுடன் ஒரு பாட்டில் மதுபானத்தையும் வைத்து பனியால் நிறைத்து அந்தக் குழியை வைக்கோலால் மூடினர்.

நேற்று முன்தினம் அந்தக் குழுவினர் அந்தக் குழியைத் தோண்டியபோது அந்த மதுபானம் அப்படியே குளிர்ச்சியாக இருப்பதைக் கண்டனர்.

பேஸலுக்கு 20 கிலோமீற்றர் தொலைவிலுள்ள Augusta Rauricaவில் அமைந்துள்ள இந்த குழிகளை கோடைக் காலத்தில் ரெஃப்ரிஜரேட்டர்கள் போல ரோமர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர்.

அந்த குழிகள் பனியாலும் பனிக்கட்டியாலும் நிரப்பப்பட்டு வைக்கோலால் மூடப்பட்டு அவற்றினுள் சீஸ் முதல் ஒயின் வரை கோடைக்காலத்தில் சேமித்து வைக்கப்பட்டிருக்கலாம்.

இதை ஆதாரப்பூர்வமாக தற்போது நிரூபித்துக் காட்டியுள்ள Peter-Andrew Schwarz தலைமையிலான குழுவினர், அடுத்த முயற்சியாக பழங்களையும் காய்கறிகளையும் அந்தக் குழிகளில் சேமித்து வைத்து அவை எவ்வளவு காலத்திற்கு கெட்டுப்போகாமல் இருக்கின்றன என்பதை சோதிக்க இருக்கிறார்கள்.

ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் தொடங்க இருக்கும் இந்த சோதனையில் அவர்கள் பனிக்கட்டி இல்லாமலே பொருட்கள் எவ்வளவு காலத்துக்கு பத்திரமாக இருக்கும் என சோதிக்க உள்ளனர்.

அந்தக் குழிகள் ரெஃப்ரிஜரேட்டர்கள் போல ரோமர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதை இந்த சோதனைகள் உறுதி செய்யாவிட்டாலும், அது சாத்தியமே என்பதை அவர்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *