சுவிஸ்சில் அதிகரித்துவரும் மக்கள் தொகை!

சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை கடந்த 2011ம் ஆண்டை விட நடப்பாண்டில் 85,000 உயர்ந்திருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. அதிக மக்கள் தொகைப் பெருக்கம் ஃபிரிபோர்க், வாட், ஜுக் மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது.ஜுரிச், ஜெனீவா, பேசெல், லாசேன் மற்றும் பெர்ன் ஆகிய நகரங்களில் மக்கள்தொகை அதிகமாக இருக்கிறது. 10,000க்கும் அதிகமானோர் நகரங்களில் வசிக்கின்றனர். கிராமங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளது.

377,000 பேர் வசிக்கும் ஜுரிச் மக்கள்தொகை அதிகமுள்ள நகரமாகும். திசினோ மாநிலத்தில் உள்ள கொரிப்போ கிராமத்தில் 12 பேர் மட்டுமே வாழ்ந்துவருகின்றனர்.

ஒரு வருடத்துக்கும் குறைவாகத் தங்கும் உரிமை பெற்றவர்கள் தவிர இப்போது சுவிஸ்ஸின் மக்கள்தொகையில் வெளிநாட்டவர் சுமார் 50,000 பேர் உள்ளனர். இவர்கள் மொத்த மக்கள்தொகையில் 22.8 சதவீதம் ஆவர்.

வெளிநாட்டவரில் 63.3 சதவீதம் பேர் யூரோ மண்டல நாடுகளைச் சேர்ந்தவர்கள். இத்தாலியர் 16 சதவீதம் ஜேர்மானியர் 15.3 சதவீதம் போர்ச்சுகீசியர் 12.3 சதவீதம் செர்பியர் 5.8 சதவீதம் ஆகும்.

கடந்த 2011ம் ஆண்டின் இறுதியில் சுவிஸ்ஸின் மொத்த மக்கள்தொகை 7,954,700 ஆகும். 2012 ஒகஸ்டில் மக்கள்தொகை கோடைகாலத்தில் எட்டுமில்லியனை எட்டும் என்று புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 1860ம் ஆண்டு முதல் சுவிஸ்ஸின் மக்கள்தொகை மூன்று மடங்காக உயர்ந்துவிட்டது. அப்போது இங்கு வசித்தவர்கள் வெறும் 2.5 மில்லியன் பேர் மட்டுமே. 1950-70களில் ஆண்டொன்றுக்கு 1.4 சதவீதம் உயர்ந்தது.

பின்பு மெல்ல மெல்லக் குறைந்து 1970 – 80களில் 0.15சதவீதம் ஆயிற்று. அப்போது புலம்பெயர்ந்தோருக்கு அனுமதி வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் கடந்த 1970ம் ஆண்டுகளில் மத்தியில் பொருளாதார நெருக்கடியும் அதிகமாயிற்று.

2000 முதல் மக்கள்தொகைப் பெருக்கம் ஆண்டொன்றுக்கு 0.9 சதவீதம் என உயர்ந்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் 1 சதவீதம் அல்லது அதை விடச் சற்றுக்கூடுதலாக மக்கள்தொகை உயர்வு காணப்படுகிறது.

Loading...