‘டிராஃபிக் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேர்ந்த பரிதாப கதி’… வீடியோ!

சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா மேம்பாலத்தில் லாரி மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் சானிடோரியம் துர்கா நகரில் வசித்து வந்தவர் நடராஜ். 56 வயதான இவர், பரங்கிமலை போக்குவரத்து காவல் பிரிவில், சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

சென்னைக்கு குடியரசு தலைவர் வருகையால், சிறப்பு கூட்டம் இன்று காலை நந்தம்பாக்கத்தில் போலீசாருக்கு நடந்தது. இதில் பங்கேற்றுவிட்டு, 11.30 மணி அளவில் வீட்டுக்கு செல்ல பைக்கில் கிளம்பினார்.

ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஏர்போர்ட் வழியாக செல்ல, கத்திபாரா பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தார்.

அதே திசையில் சிமெண்ட் கலவை செய்யும் கனரக லாரி ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அப்போது ஆட்டோவை முந்தி சென்ற லாரி, இடதுபுறமாக பூந்தமல்லி வளைவில் திரும்பியது.

ஆனால் அந்த வழியில் சென்ற நடராஜனை கவனிக்காமல், லாரி வேகமாக அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் சதீஷை போலீசார் கைது செய்துள்ளனர். கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியது, உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த நடராஜனின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ‘நடராஜ் ஹெல்மெட் அணியவில்லை என்று ஆரம்பத்தில் தகவல் வெளியானது.

ஆனால், அவரின் தலையிலிருந்து சேதமடைந்த ஹெல்மெட்டை அகற்றினோம். லாரியின் டயர் தலையில் ஏறியதால் ஹெல்மெட் நொறுங்கியுள்ளது.

நடராஜ், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வுபெற உள்ள நிலையில் இந்த விபத்தில் அவர் இறந்துவிட்டார்’ என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *