டீ கப்பா? – உலக கோப்பையா?: அபிநந்தனை கிண்டல் செய்து பாக். விளம்பரம் சர்ச்சை!  -(Video)

இஸ்லாமாபாத்,ஜூன் 12- பாகிஸ்தானின் பிணையக் கைதியாக திரும்ப வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை கிண்டல் செய்வது போன்ற ஒரு கிரிக்கெட் விளம்பரத்தை வெளியிட்டு இந்திய மக்களிடம் கடுப்பை கிளப்பி விட்டிருக்கிறது பாகிஸ்தான்.

தற்போது நடந்து வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஜூன் 16 தேதி அன்று மோதவிருக்கின்றன. பொதுவாகவே இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் என்றால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அளவிலே இருதரப்பு ரசிகர்களின் மனநிலையும் இருக்கும்.

அது மட்டுமில்லாமல், இதுவரை இந்தியா- பாகிஸ்தான் மோதிக் கொண்ட ஒரு உலக கோப்பை போட்டியில் ஓர் ஆட்டத்தில்  கூட பாகிஸ்தான் இந்தியாவை வென்றது கிடையாது.  இந்நிலையில் நடக்கவிருக்கும் போட்டிக்கு விளம்பரம் வெளியிட்ட பாகிஸ்தான், அபிநந்தனை கிண்டல் செய்திருக்கிறது.

அந்த விளம்பரத்தில் பாகிஸ்தான், அபிநந்தனுக்கு தேநீர் கொடுக்கிறது. .அவரிடம் சில கேள்விகள் கேட்கிறது. அவர் சரியாக பதில் சொல்லவில்லை. பிறகு ‘டீ எப்படி இருக்கிறது’ எனக் கேட்கிறார்கள். அபிநந்தன் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார். ‘சரி நீ போகலாம்’ என்கிறார்கள்.

அபிநந்தன் டீ கப்போடு அங்கிருந்து நகர்கிறார். உடனே ஒரு அதிகாரி சட்டையை பிடித்து இழுத்து ‘காபி கப்பை கொடுத்துவிட்டு போ’ என்கிறார்.

உலக கிரிக்கெட் இனி பாகிஸ்தானுக்கே  என்பதாக  டீ கப்போடு தொடர்புப்படுத்தி இப்படி ஒரு விளம்பரத்தை செய்திருக்கிறார்கள். இதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் பலர் பாகிஸ்தானையும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியையும் இணையத்தில் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இரு தரப்பு ரசிகர்களிடையே மோதல் வலுத்து உள்ளது.

இது தவிர ஓர் இந்திய ராணுவ வீரரை  இவ்வாறு கேவலப்படுத்தி இருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. என்றாலும் இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட விளம்பரம் அல்ல எனத் தெரிய வந்துள்ளது. யாரோ கிரிக்கெட் ரசிகர்கள் சிலர் தயாரித்து இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

The post டீ கப்பா? – உலக கோப்பையா?: அபிநந்தனை கிண்டல் செய்து பாக். விளம்பரம் சர்ச்சை!  -(Video) appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *