தந்தையின் உடலைக் கொண்டுவர உதவுங்கள்: மகளின் உருக்கமான கோரிக்கை

மீன்பிடிக்கச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் மீனவர் ஒரு பலியான நிலையில் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்ட அவரின் உடலை தமிழகத்துக்கு கொண்டுவர மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் இருந்து கருப்பையா என்பவருக்குச் சொந்தமான படகில் முனியசாமி, கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 4 மீனவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படை கப்பல், கருப்பையா படகின் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.

இதனால் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். இதில் கார்மேகம், செல்வம், முத்துமாரி ஆகிய 3 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு மீனவரான முனியசாமி என்பவர் கடலில் மூழ்கிப் பலியான நிலையில் அவரது உடல் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் அகஸ்தியர் கூட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்த முனியசாமி .

அவரின் மனைவி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் முனியசாமிக்கு இரு மகள்கள் உள்ளனர்.

முனியசாமி இறப்பு குறித்து அவரின் இளைய மகள் சண்முகபிரியாவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ராமேஸ்வரம் மீன் துறை அலுவலகத்துக்கு வந்த சண்முகபிரியா, இலங்கையில் வைக்கப்பட்டுள்ள தன் தந்தை முனியசாமியின் உடலுக்குத் தங்கள் சொந்த ஊரில் இறுதி காரியங்கள் செய்ய வேண்டும்.

எனவே உடலை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *