தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குப்பதிவு

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், தொலைக்காட்சி நடிகை நிலானி, உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், போலீஸ் உடை அணிந்து நடிகை நிலானி பேசும் போது, 

இந்த உடையை அணிவதற்கு ரொம்ப கேவலமாக நினைக்கிறேன். இந்த உடையை அணியவே கூசுகிறது. படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இது முடியப்போவதில்லை. இனிமேல் தான் ஆரம்பமாகப் போகிறது. இது தமிழர்களை தீவிரவாதிகளாக்கும் முயற்சி. நம்மை போராட விட்டு, தீவிரவாதியாக்கி, இலங்கையில் நடத்தப்பட்ட படுகொலை போல் நம்மையும் கொல்ல நினைக்கின்றனர். 

இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். 

இந்த நிலையில், தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Bansterlite #SaveThoothukudi #SterliteProtest