தைப்பூசத்தன்று சந்திர கிரகணமா? ஆலயத்தை மூட தேவையில்லை! – இந்து சங்கம்

கோலாலம்பூர், ஜன.12- இவ்வருட தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாகவும் அதனால் கடந்தாண்டு போல இவ்வாண்டும் ஆலயங்கள் நடைசாத்த வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் அவ்வாறு செய்யத் தேவையில்லை என்று மலேசிய இந்து சங்கம் தெளிவுப்படுத்தியது.

இவ்வாண்டு தைப்பூசத்தன்று நிகழும் சந்திர கிரகணம் குறித்து இந்த சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ மோகன் ஷான் விரிவான விளக்க அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

அதாவது முருகப் பெருமானின் தைப்பூச திருநாளான, வருகிற 21.01.2019, விளம்பி வருடம் தை மாதம் 7ஆம் நாள் திங்கள்கிழமை மலேசியாவில் சந்திர கிரகணம் இல்லை. ஆலயங்கள் நடைசாத்த தேவையில்லை.

வழக்கம் போல் ஆலய பூஜைகள், தைப்பூச காவடிகள், பால்குடங்கள், விஷேச ஆராதனைகளை செய்யலாம். சந்திர கிரகணங்களில் பல வகைகள் உண்டு.

பூமியால் சந்திரன் முழுமையாக மறைக்கப்படுவது பூரண சந்திர (முழு) கிரகணம். சந்திரனின் ஒரு பகுதி மட்டும் மறைக்கப்படுவது பகுதி சந்திர கிரகணம். சந்திரனை மறைக்காமல் பூமியின் மங்கலான புற நிழல் மட்டும் சந்திரனின் மீது படுவது நிழல் கிரகணம்.

சந்திரன் முழுமையாக தெரியும், ஆனால் சந்திரனில் இருந்து வரும் ஒளி மட்டும் சற்று குறைவாக இருக்கும். நிழல் கிரகணங்களுக்கு கிரகண தோஷம் இல்லை.

அடுத்தது பூமியின் வேறு பகுதியில் நிகழும் கிரகணம். உதாரணத்திற்கு அங்கு இரவில் நிகழும், இங்கு பகலாக இருப்பதால் தெரியாது. தெரியாத கிரகணங்களுக்கு தோஷம் இல்லை.

இப்படிப்பட்ட கிரகணமே தைப்பூசத்தன்று பூமியின் மறுபகுதியில் இரவில் நிகழ்கிறது. அப்போது மலேசியாவில் பகலாக இருக்கும். அமெரிக்கா, ஆப்பிரிக்கா,
ஐரோப்பாவில் பார்க்கலாம். இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியாவில் அதை பார்க்க முடியாது.

மலேசிய நேரப்படி காலை 11.34 மணி முதல் பிற்பகல் 2.51 மணி வரை நிகழ்கிறது. எனவே, மலேசியா, சிங்கப்பூரில் கிரகண தோஷம் இல்லை. பொதுமக்கள் தோஷ பரிகாரம் செய்து கொள்ள தேவை இல்லை.

ஆலயங்கள் நடை சாத்தவோ, பரிகார பூஜைகள் செய்யவோ தேவையில்லை. வழக்கம் போல ஆலய நித்திய, தைப்பூச விசேஷ பூஜைகளை செய்யலாம். இவ்வாறு மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோ ஆர்.எஸ். மோகன் ஷான் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

The post தைப்பூசத்தன்று சந்திர கிரகணமா? ஆலயத்தை மூட தேவையில்லை! – இந்து சங்கம் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *