தைப்பூசத்தில் உணவை வீணாக்காதீர்! – பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஜோர்ஜ் டவூன், ஜன.11- தைப்பூச காலத்தில், பக்தர்களுக்கு இலவச உணவுகளை வழங்குவதற்காக அமைக்கப் படும் கடைகளின் உரிமையாளர்கள், உணவுகளை வீணாக்க வேண்டாம் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறிவுறுத்தியது.

ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசக் காலத்தில் வழங்கப் படும் உணவுகளைப் பெற்றுக் கொள்ளும் பக்தர்கள், அவற்றை பாதி உண்டு விட்டு, மீதத்தை வீசி விடுகின்றனர் என்று அச்சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி சுப்பாராவ் சுட்டிக் காட்டினார்.

இவ்வருடமும் அந்நிலைமை தொடரும் என்றும், நாடு தழுவிய நிலையில், குறைந்தது 3,000 டன் உணவுகள் இவ்வாண்டு வீணாக்கப் படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

தைப்பூசத்தில் நேர்த்திக் கடன்களை செலுத்த வரும் பக்தர்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்கள் வழங்கப் படுவது வழக்கம். அந்தத் திருநாள் குறைந்தது மூன்று நாட்களுக்கு கொண்டாடப் படும் என்றும், பினாங்கு மாநிலத்தில் மட்டும் 120 உணவு கடைகள் அமைக்கப் படலாம் என்றும் சுப்பாராவ் கருத்து தெரிவித்தார்.

“இலவச உணவுகளை வழங்குவது சிறந்த செயலாகும். இருந்த போதிலும், உணவுகளை வீணாக்குவது சிறந்த செயலல்ல. ஆலயச் சாலைகளில் வெறுமனே நடந்துச் செல்பவர்களுக்கு இலவச உணவு வழங்கப் பட வேண்டிய அவசியமில்லை. பசித்தால், அவர்களாகவே உணவுகளை அக்கடைகளிலிருந்து பெற்றுக் கொள்வர்.

“அதுமட்டுமல்லாது, உணவுகளை முழுமையாக உண்டு முடிக்க இயலாதவர்கள், அதனை வீச வேண்டிய அவசியமில்லை. அதனை மூடி வைத்துக் கொண்டு, பின்னர் மீண்டும் பசிக்கும் போது, அதனை உண்ணலாம்” என்று அவர் அறிவுறுத்தினார்.

The post தைப்பூசத்தில் உணவை வீணாக்காதீர்! – பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *