ஷா ஆலாம், ஏப்ரல்.16- தேர்தல் ஆணையத்தின் எல்லை சீரமைப்பினால் ஏற்பட்ட தொல்லையால் தாம் இம்முறை வேறொரு  எந்தத் தொகுதியில்  போட்டியிடுவது என்று தெரியாத நிலையில்  இருக்கிறார் ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் முன்னாள்  உறுப்பினர் டாக்டர் சேவியர். 

முன்பு ஶ்ரீ அண்டாலாஸ் என்று அழைக்கப்பட்ட அத்தொகுதி, இந்தப் பொதுத் தேர்தலில், சுங்கை கண்டீஸ் தொகுதி என  தேர்தல் ஆணையத்தால் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அத்தொகுதியில் 54 விழுக்காட்டினர் மலாய்க்காரர்கள் அல்லாத வாக்காளர்களாக இருந்தனர்.  அத்தொகுதியில் வாக்கு விகிதாச்சார  சமநிலை  இருந்தது 

இப்போது அத்தொகுதியின் எல்லை சீரமைப்பினால், அப்பகுதியில் வாக்களிக்கும் மலாய்க்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது. இப்போது அத்தொகுதியில் 75 விழுக்காடு அல்லது 78 விழுக்காட்டினர் வரை மலாய்க்காரர்கள் ஈடம் பெற்றுள்ளனர்.

”இதனைக் கருத்தில் கொண்டு,  இம்முறை அத்தொகுதியில் மலாய்க்காரர் ஒருவரை வேட்பாளரை பி.கே.ஆர் நிறுத்தும்” என்று  சேவியர் சொன்னார்.  

கடந்த 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றிப் பெற்று ஶ்ரீ அண்டாலாஸ் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் சேவியர், கடந்த 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 15,000 வாக்கு வித்தியாசத்தில் அந்தத் தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொண்டார்.

இம்முறை தாம் எந்தத் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்ற தகவலை டாக்டர் சேவியர் தெரிவிக்கவில்லை. அது குறித்து கட்சியே முடிவு செய்யும் என்றார் அவர்.