நாய் சுடப்பட்ட சம்பவம்: அதிகாரியின் செயலை தற்காப்பதா? -மசீச போலிஸ் புகார்

ஈப்போ, மே.24- ஆடவர் ஒருவர் குரங்கினை கூண்டில் அடைத்து துப்பாக்கியால் சுட்ட காணொளி வீடியோ சில தினங்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னமே மிருகங்களை துன்புறுத்தும் மேலும் ஒரு  காணொளி தற்பொழுது வந்துள்ளது.

அந்த  காணொளியில் நபர் ஒருவர் நாய் ஒன்றை துப்பாக்கியால் இரு முறை சுடும் காட்சி உள்ளது. அணிந்துள்ள உடையின் அடிப்படையில் அவர் ஈப்போ மாநகர் மன்ற ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த செயலுக்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவ்வதிகாரியின் செயலை தற்காத்து ஈப்போ மாநகர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இப்பகுதியில் உள்ள தெரு நய்களில் அங்குள்ள மக்களுக்கு பெரும் தொல்லைகளை விளைவிப்பதாக எங்களுக்கு புகார் வந்தது.

அண்மையில் கூட இப்பகுதியில் தெரு நாய் ஒன்று ஒரு நபரையும் தாக்கியுள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்நடவடிக்கையின் பொழுது ஒரு தெரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டது. இது நாய்கள் உரிமச் சட்டத்திற்கு உட்பட்ட நடவடிக்கை தான் என  அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பில் கருத்துரைத்த பேரா மாநில மசீச பொது சேவை பிரிவு தலைவர் லோ குவோ நான், 2015ஆம் ஆண்டு மிருக நலன் சட்டத்தின் படி தெரு நாய்களை சுடுவதற்கு அனுமதி கிடையாது. இருப்பினும் அவர்கள் இச்செயலை புரிந்துள்ளனர்.

அந்த அதிகாரிக்கு சுடுவதற்கான உரிமம் இருந்ததா? என்று கூட தெரியவில்லை. இவ்விவகாரம் தொடர்பில் பலர் எங்களை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நான் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post நாய் சுடப்பட்ட சம்பவம்: அதிகாரியின் செயலை தற்காப்பதா? -மசீச போலிஸ் புகார் appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *