பயமறியா மான்ஸ்டரின் கதை – கே.ஜி.எஃப் விமர்சனம்

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் – ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கே.ஜி.எஃப்’ படத்தின் விமர்சனம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty

கர்நாடகாவில் தனது நோய்வாய்ப்பட்ட தாயுடன் வசித்து வருகிறார் யஷ். சிகிச்சை செய்ய பணமில்லாமல் யஷ்ஷின் தாய் இறந்துவிடுகிறார். இறக்கும் தருவாயில், நீ சாகும் போது பணக்காரனாக தான் சாக வேண்டும் என்று சொல்லிவிட்டு சாகிறார்.

தனது தாய்யின் கட்டளையை நிறைவேற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மும்பை செல்லும் யஷ்ஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். கையேந்தினால் சில்லறை தான் கிடைக்கும், கையை ஓங்கினால் தான் நிறைய கிடைக்கும் என்று அந்த பிச்சைக்காரர் சொல்கிறார்.

இனி தனக்கான பாதை என்னவென்பதை யஷ் தீர்மானிக்கிறார். இந்த நிலையில், மும்பையில் அட்டகாசம் செய்து வந்த போலீஸை ஒருவரை அடித்து தனக்கென்று ஒரு பிராண்ட்-ஐ உருவாக்குகிறார். தொடர்ந்து மும்பையில் அட்டூழியம் செய்து வரும் பெரிய தலைகளை குறிவைக்கும் யஷ், வேகமாக மும்பையில் ஒரு மான்ஸ்டராக உருவாகிறார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் இருக்கும் தங்கச் சுரங்கமான கே.ஜி.எஃப்.பின் தலைவரை கொலை செய்ய நிறைய பேர் முயன்றும் முடியாததால், யாராலும் நெருங்க முடியாத அவரை தான் எதிர்ப்பதாக யஷ் கர்நாடகாவுக்கு செல்கிறார். அங்கு நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியை பார்த்த உடனே காதல் வர, தனது காதலையும் ஸ்ரீநிதியிடம் சொல்லிவிடுகிறார்.

சாதாரணமாக பின்னர், யாராலும் எளிதில் நுழைய முடியாத கே.ஜி.எஃப். சுரங்கத்திற்குள் செல்லும் யஷ் கே.ஜி.எஃப். தலைவரை கொன்றாரா? தான் ஒரு மான்ஸ்டர் என்பதை நிரூபித்தாரா? ஸ்ரீநிதியுடன் இணைந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். யாருக்கும் பயப்படாத மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக படத்தின் ஓட்டத்தை வேகப்படுத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார். அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.

ஒரு சிறிய குழுவை வைத்து ஒரு மாஸ் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார் பிரஷாந்த் நீல். தனக்கென்று யாருமே இல்லாத ஒருவன், தனது தாயின் சொல்லிற்காக பணக்காரனாக அவன் எடுக்கும் முடிவுகளும், அதன்மூலம் என்னவாகிறான் என்பதையே படமாக உருவாக்கி இருக்கிறார். கதை பெரிதும் நாயகனையே மையப்படுத்தியே நகர்கிறது. படத்தின் கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம்பெறும் சில காட்சிகள் படத்திற்கு முட்டுக்கட்டை போடும்படியாக இருக்கிறது. மற்றபடி கன்னட சினிமாவில் இது ஒரு நல்ல முயற்சி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்தின் கலை பணிகளில் ஷிவ குமார் மெனக்கிட்டிருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். வசனங்கள் படத்திற்கு பெரிய பலம்.

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

மொத்தத்தில் `கே.ஜி.எஃப்’ பார்க்க வேண்டிய இ(ப)டம். #KGFTamil #KGF #KGFTamilReview #Yash #SrinidhiShetty

Related Tags :

Leave a Reply

Your e-mail address will not be published. Required fields are marked *