பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டில் மயங்கி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்துக்குட்பட்ட பல பகுதிகளில் சிறுவர், சிறுமியர் ஒருவரையொருவர் கைகளால் வேகமாக அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.

இந்நிலையில், இங்குள்ள கனேவால் மாவட்டம், மியான் சன்னு நகரில் உள்ள அரசுப் பள்ளியில் சமீபத்தில் ஒருநாள் இடைவேளையின்போது பிலால் மற்றும் ஆமிர் என்னும் இரு மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடினர்.

இந்த விளையாட்டை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்களும் மாணவர்களும் சுற்றிநின்று வேடிக்கை பார்த்தனர். சிலர் அந்த காட்சிகளை தங்களது கைபேசிகளில் வீடியோவாக பதிவும் செய்தனர்.

நேரம் செல்லச்செல்ல அவர்கள் இருவரும் வெகு ஆவேசமாக மோதிக்கொண்டனர். ஒருகட்டத்தில் ஆமிரின் தாக்குதலை தாங்க முடியாத பிலால் பள்ளி மைதானத்தில் சுருண்டு விழுந்தான்.

மயங்கிய நிலையில் கிடந்த அவனுக்கு உரிய முதலுதவி அளிக்க யாரும் முன்வராததால் கழுத்தில் விழுந்த அடியால் பிலாலின் உயிர் பிரிந்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்கு பின்னர் உயிருடன் இருந்தபோது பிலாலும் ஆமீரும் மோதிக்கொண்ட கடைசி வீடியோ காட்சிகள் சமூகத்தளங்களில் வெளியாகி வருகின்றன.