பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை – மனைவி போலீசில் புகார்

அண்ணாநகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். #PowerStarSrinivasan

தமிழ் சினிமாவில் ‘லத்திகா’ என்ற படத்தை இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ‘‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’’ படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படம் பவர் ஸ்டார் சீனிவாசனை பிரபலமாக்கியது.

சென்னை அண்ணா நகரில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர் திடீரென காணாமல் போயுள்ளார்.

இதுதொடர்பாக சீனிவாசனின் மனைவி ஜூலி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காலையில் புகார் செய்தார். அதில் தனது நண்பரை பார்க்கச் செல்வதாக கூறிவிட்டு சென்ற கணவரை காணவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மர்ம நபர்கள், செல்போனில் தொடர்பு கொண்டு கணவரின் பெயரில் உள்ள சொத்துக்களை தங்களது பெயருக்கு மாற்றி தரச்சொல்லி மிரட்டுவதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

பவர் ஸ்டார் சீனிவாசன், சினிமாவில் நடித்து வந்த போதிலும் மோசடி வழக்குகளிலும் தொடர்ந்து சிக்கி வந்தார். ஒருமுறை கைதாகி திகார் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். கடன் பிரச்சினையும் அவருக்கு இருந்து வந்துள்ளது. அதில் இருந்து மீள்வதற்காக சீனிவாசன், தேனியை சேர்ந்த சிலரிடம் அவர் அதிக அளவில் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் கடத்தப் பட்டிருக்கலாமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையிலேயே போலீஸ் புகாரும் உள்ளது. நேற்று காலை 8 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற பவர்ஸ்டார் சீனிவாசன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சீனிவாசன் செல்போனை எடுக்கவில்லை. இதன் பிறகே போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சீனிவாசன் ஊட்டியில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவரிடம் போனில் பேசிவிட்டோம் என்றும், அவர் இருக்கும் இடம் தெரிந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஊட்டியில் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு சொந்தமாக பங்களா உள்ளதாகவும், அதனை விற்பனை செய்வதற்காகவே சீனிவாசன் அங்கு சென்றிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்து கொள்வதற்காக சீனிவாசனை செல்போனில் தொடர்பு கொண்டபோது பதட்டத்துடன் பேசியது போல தெரிந்தது. ஹலோ என்று கூறிய பவர்ஸ்டார் பிறகு பேசுவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

எனவே அவர் கடன் காரர்களின் பிடியில் சிக்கி இருக்கலாமோ? என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சீனிவாசனுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். #PowerStarSrinivasan

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *