பாண்ட்யா என்னைவிட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் – கபில்தேவ் விருப்பம்

ஹர்திக் பாண்ட்யா என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக வர வேண்டும் என்று இந்திய ஜாம்பவான் கபில்தேவ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் கபில்தேவ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

ஹர்திக் பாண்ட்யாவை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை நிறுத்துங்கள். அவரை இயல்பாக விளையாட விடுங்கள். அவரிடம் நிறைய திறமை இருப்பதை நான் ஏற்கனவே பார்த்துள்ளேன். அவர் என்னை விட சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆல்-ரவுண்டர் என்பவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஜொலிக்க வேண்டும். என்னை பொறுத்தவரை அவர் இப்போது பேட்டிங் ஆல்-ரவுண்டர் மட்டும் தான். முழுமையான ஆல்-ரவுண்டர் என்ற அந்தஸ்தை எட்டுவதற்கு அவர் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். பந்து வீச்சில் அவரால் முன்னேற்றம் காண முடியும் என்று நம்புகிறேன். அதே சமயம் அவர் அணிக்கு கணிசமான பங்களிப்பை அளிக்கிறார். அது தான் மிகவும் முக்கியமானது.

உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயமடைந்திருப்பது வருத்தத்திற்குரியது. காயம் விஷயத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது. அவருக்கு பதிலாக வரும் இன்னொரு வீரர் அவரை விட நன்றாக ஆடலாம் என்று நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமே நல்லது. இருப்பினும் இது போன்ற முக்கியமான வீரர் காயமடைந்திருப்பது மோசமான ஒன்று.

இந்திய அணி, பலம் வாய்ந்த தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறது. இதே வெற்றிப்பயணத்தை பாகிஸ்தானுக்கு எதிராகவும் தொடருவார்கள் என்று நம்புகிறேன்.

இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு உகந்த வகையில் அமைக்கப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. ஆடுகளத்தில் சிறிய அளவில் புற்கள் இருந்தாலும், 250 ரன்களை எடுப்பது கடினமாகி விடும். ரசிகர்கள் சிக்சர், பவுண்டரிகளைத் தான் விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஆடுகளம் 60 சதவீதம் பேட்ஸ்மேன்களுக்கும், 40 சதவீதம் பந்து வீச்சாளர்களுக்கும் சாதகமாக அமைக்கப்பட வேண்டும். தற்போதைய கட்டத்தில் பெரும்பாலும் 80 சதவீதம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையிலேயே ஆடுகளங்கள் உள்ளன.

எல்லாக்காலத்திலும் சிறந்த இந்திய லெவன் அணியை நான் தேர்வு செய்தால் அதில் நிச்சயம் யுவராஜ்சிங்குக்கு இடம் உண்டு. முறையான பிரிவு உபசார போட்டியில் விளையாட அவர் தகுதியானவர். அவரை போன்ற வீரர்கள் கடைசி போட்டியை விளையாடி விட்டு களத்தில் ஓய்வு அறிவிப்பு வெளியிடுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன்.

இவ்வாறு கபில்தேவ் கூறினார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *