பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு காணொளி; பதிவேற்றம் செய்ய புதிய வரம்புகள்!

சான் பிராசிஸ்கோ, மே.15- ‘பேஸ்புக்’ சமூக வலை தளத்தில்  நேரடி ஒளிபரப்பு காணொளி பதிவேற்றம் செய்வதில் வரம்புகள் அமல்படுத்தப் போவதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. நியூசிலாந்து கிரைஸ்ட்சர்ச் மசூதியில் நடந்த கொலை சம்பவம் சமூக ஊடகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் பேஸ்புக்கின் சட்ட திட்டங்களை மீறுவோர் குறிப்பாக ஆபத்து விளைவிப்பதாக கருதப்படும் தனி நபர்- இயக்கங்களின்  பக்கங்களில் காணொளியை நேரடி ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்படுமென பேஸ்புக் நிறுவனத்தின் ஒருமைப்பாடு துணைத் தலைவர் கய் ரோசன் தெரிவித்தார்.

எங்கள் தளத்தில் உள்ள சேவையை கிரைஸ்ட்சர்ச் கொலை சம்பவம் போன்ற பயங்கரவாத சம்பவங்களுக்கு பயன்படுத்துவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.  எனவே இச்சேவையைப் பயன்படுத்துவதற்கு சில வரம்புகளை முன் வைக்கவுள்ளோம். இந்த நேரடி ஒளிபரப்பு சேவையைத்  தவறான காரியத்திற்கு பயன்படுத்துவோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது மட்டுமல்லாது தீவிரவாத கருத்துக்களையும் காணொளிகளையும் பதிவேற்றம் செய்து பகிரும் தரப்பினர் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன் தொடக்கமாக அவர்களின் பேஸ்புக் பக்கம் முடக்கப்படும்.

மேலும் பேஸ்புக் வலைத்தளத்தில் உள்ள இதர சேவைகளிலும் அதிரடி மாற்றம் செய்ய நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம். குறிப்பாக இப்பக்கத்தில் விளம்பரங்கள் தயாரித்து பதிவேற்றம் செய்வதை இவ்வாரம் தொடங்கி தடை செய்யவுள்ளோம்  என அவர் தமதறிக்கையில் குறிப்பிட்டார்.

இதனிடையே கிரைஸ்ட்சர்ச் மசூதி சம்பவ காணொளியை எங்கள் வலைத்தள பக்கங்களிலிருந்து முழுமையாக நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் சில தரப்பினர் அதனை பல புதிய வடிவங்களில் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் அந்த காணொளியின் உள்ளடக்கத்தை அறியாமலே பகிர்கின்றனர். இந்த சூழலை எதிர்கொள்ள அதி நவீன தொழில் நுட்ப செயல்பாடுகள்  தேவைப்படுகின்றன என்றும் கய் ரோசன் கூறியுள்ளார்.

The post பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு காணொளி; பதிவேற்றம் செய்ய புதிய வரம்புகள்! appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *