போர்ட்டிக்சன் தேர்தல்: அன்வாருக்கு ஆதரவாக அம்னோ தலைவர்கள்!

கோலாலம்பூர், செப்.14- போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் போட்டியிடும் பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு, மேலும் ஓர் அம்னோ தலைவர்,  டத்தோஶ்ரீ ஷாஹிடான் காசிம் ஆதரவாக குரல் எழுப்பி உள்ளார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தலைவர்களில், அன்வார் தான் சிறந்த தலைமையைக்  கொண்டிருக்கிறார் என்றும், அதனால் அவர் நாட்டின் 8-ஆவது பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டால், அது அனைவருக்கும் நன்மையாக அமையும் என்று பிரதமர் துறையின் முன்னாள் அமைச்சரான ஷாஹிடான் கருத்து தெரிவித்து உள்ளார்.

“பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு பின்னர், அன்வார் பிரதமராக தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்று நாம் கருதினால், அப்பதவிக்கு டத்தோஶ்ரீ முக்ரீஸ் மகாதீர் அல்லது டத்தோஶ்ரீ அஸ்மின் அலி தேர்ந்தெடுக்கப் படுவர்.

“இவர்களை காட்டிலும், நமக்கு நன்கு அறிமுகமான அன்வாரே பிரதமர் பதவிக்கு சிறந்தவர்” என்று ஷாஹிடான் கூறினார்.  போர்ட்டிக்சன் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தில், அன்வார் அவசரமாக இந்த இடைத் தேர்தலை அறிவித்துள்ளார் என்று பலர் கருத்துரைத்து வருகின்றனர்.

ஆனால், அன்வார் போர்ட் டிக்சன் தொகுதியில் வெற்றிப் பெற அவருக்கு தேவையான உதவிகளை வழங்க தாம் தயாராக உள்ளதாக அம்னோவின் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் நேற்று அறிவித்தார்.

“நஸ்ரி எனக்கு நல்ல நண்பர். அம்னோவில் பேச்சு சுதந்திரத்திற்கு இடம் உண்டு. எதிர்கட்சியை சேர்ந்த அன்வாருக்கு உதவப் போவதாக நஸ்ரி அறிவித்ததால், அவர் மீது அம்னோ நடவடிக்கை எடுக்கும் என்று நான் கருதவில்லை” என்று ஷாஹிடான் கூறினார்.

“போர்ட் டிக்சன் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக பலர் கூறுகின்றனர். ஆனால், பாஸ் அல்லது அம்னோவும் அத்தொகுதியில் வெற்றிப் பெற முடியும்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

“தற்போது நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. அன்வார் அடுத்த பிரதமராக கூடாது என்ற எண்ணத்தில், போர்ட்டிக்சன் தொகுதியில் பாஸ் அல்லது அம்னோ கட்சி போட்டியிட வேண்டும். ஆனால் அப்படி செய்வதால் யாருக்கு நன்மை ஏற்படும்?

The post போர்ட்டிக்சன் தேர்தல்: அன்வாருக்கு ஆதரவாக அம்னோ தலைவர்கள்! appeared first on Vanakkam Malaysia.