மாயமாகும் பாலியல் தொழிலாளியை தேடும் திக் திக் நிமிடங்கள் – சிகை விமர்சனம்

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் கதிர் – ராஜ் பரத் – மீரா நாயர் – ரித்விகா நடிப்பில் வெளியாகி இருக்கும் `சிகை’ படத்தின் விமர்சனம். #SigaiReview #Kathir

ராஜ்பரத் பாலியல் தொழிலாளிகளை வாடிக்கையாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கும் தொழில் செய்பவர். அவர் அனுப்புகிற மீரா நாயர் காணாமல் போகிறார். அவர் சென்ற இடத்திற்கு நேரில் சென்று பார்க்கும் ராஜ் பரத் அதிர்ச்சிக்குள்ளாகிறார். மீராவை யாருக்காக அனுப்பி வைத்தாரோ அவர் செத்து கிடக்கிறார். அருகில் திருநங்கையான கதிர் அழுது கொண்டிருக்கிறார்.

கடைசியில் கதிருக்கும், இறந்தவருக்கும் என்ன சம்பந்தம்? அவர் எப்படி இறந்தார்? மீரா நாயர் எங்கே போனார்? அவரைத் தேடி அலையும் திக் திக் நிமிடங்களே படத்தின் மீதிக்கதை.

கதையில் முக்கிய திருப்பம் தரும் வேடத்தில் வருகிறார் கதிர். அவரது பாசம், ஏக்கம், பேச்சு என திருநங்கையின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காட்சியில் அவரது நடையில் இருக்கும் நளினம் ஒன்றே போதும். கதாபாத்திரத்தை தாங்கி நடித்திருக்கும் கதிருக்கு பாராட்டுக்கள். துணிச்சலான வேடத்தை அனாயசமாக செய்து கைதட்டல் பெறுகிறார்.

யாரும் செய்ய தயங்கும் வேடத்தில் ராஜ் பரத். செய்யும் தொழிலை நினைத்து விரக்தி அடையும்போதும் மீராவை தேடும்போதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தை தாங்குகிறார். தங்கையை காப்பாற்ற பாலியல் தொழிலுக்கு செல்லும் மீரா நாயரின் முடிவு பரிதாபம். ரித்விகாவுக்கு முக்கிய வேடம். பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்ணாக வரும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மயில்சாமி, ராஜேஷ் சர்மா, மல் முருகா என மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள்.

ஆரண்ய காண்டம், மேற்கு தொடர்ச்சி மலை என்று தமிழில் உலக திரைப்படங்களுக்கு நிகரான படங்கள் உருவாகின்றன. அந்த வரிசையில் இடம்பெறக்கூடிய ஒரு கல்ட் திரில்லர் படமே சிகை. முதல் படத்திலேயே எளிமையான ஒரு கதையை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் சிறந்த திரைப்படமாக்கி கொடுத்து இருக்கும் ஜெகதீசன் சுபுவுக்கு பாராட்டுகள்.

படத்தின் டைட்டிலில் வரும் சென்னையின் இரவுக் காட்சிகளே இவர்களது கூட்டணியின் உழைப்பை பறைசாற்றுகிறது. இறுதிக்காட்சி வரை அது தொடர்ந்து நம்மை படத்தோடு கட்டிப்போடுகிறது.

படம் முடிந்த பின்னர் பாலியல் தொழில் செய்பவர்கள் மீது சின்ன இரக்கமாவது நிச்சயம் ஏற்படும். மனிதாபிமானத்தை தூக்கி நிறுத்திய வகையில் சிகை அனைவரும் கொண்டாடி ஏற்றுக்கொள்ள வேண்டிய படைப்பு. இதுபோன்ற நல்ல படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் போவது என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். படம் நாளை இணையத்தில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

நவின் குமாரின் ஒளிப்பதிவும், ரான் யோகனின் இசையும், அனுசரணின் படத்தொகுப்பும் படத்திற்கு கூடுதல் பலம்.

மொத்தத்தில் `சிகை’ தேவையானது. #SigaiReview #Sigai #Kathir #RajBharath #MeeraNair #Riythvika

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *