கோலாலம்பூர்,டிச.07- தமிழ்ப்பள்ளியிலும், சீனப்பள்ளியிலும் தொடக்கக்கல்வி கற்ற மாணவர்கள் முழு உதவி ஆசிரம பள்ளிகளில் இடைநிலைக் கல்வியைத் தொடர முடியாதா? ஏன்? என்று ரேவதி என்ற பாலர் பள்ளி ஆசிரியை ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோலசிலாங்கூர், ஜெராமிலுள்ள பிராவுன்ஸ்தன் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி ஒருவர் அண்மையில் யூபிஎஸ்ஆர் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் 8 ஏக்கள் பெற்றிருப்பதாகவும், ஆனால், தமிழ்ப்பள்ளியில் படித்த ஒரே காரணத்திற்காக முழு உதவி ஆசிரம பள்ளியில் பயில நிராகரிக்கப்பட்டிருப்பதாகவும் அம்மாணவியின் முன்னாள் ஆசிரியையான ரேவதி தெரிவித்துள்ளார்.
முழு உதவி ஆசிரம பள்ளியில் பயில இந்திய, சீன மாணவர்களுக்கு இடமில்லை என்று அப்பள்ளியின் நிபந்தனையில் இல்லை. மாறாக, தேசியப் பள்ளி மாணவர்களை மட்டுமே அந்தப் பள்ளி ஏற்றுக் கொள்ளும் என்று அந்த நிபந்தனையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக ரேவதி தனது பேஸ்புக் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“பொதுப் பள்ளியில் ஏன் இவ்வாறான பாராபட்சம்? இதுவே அது சமயப்பள்ளியாக இருந்தால் பிற இன மாணவர்களுக்கு இடமில்லை என்பது நியாயம்” என்று கூறியுள்ளார் ரேவதி.
இதனிடையே, 8 ஏக்கள் பெற்றிருக்கும் சம்பந்தப்பட்ட மாணவிக்கு வாழ்த்துகள். ஆனால், நிபந்தனைப்படி அம்மாணவி முழு உதவி ஆசிரம பள்ளியில் பயில முடியாது என்று முழு உதவி ஆசிரம பள்ளி விவகாரப் பிரிவின் உதவி தலைமை இயக்குநர் நோர் அஸ்லினா அப்துல் ரஹிம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post முழு உதவி ஆசிரமப் பள்ளிகளில் பயில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடமில்லையா? appeared first on Vanakkam Malaysia.