ராஜீவ்காந்தி வழக்கில் சிக்கிய தமிழர் கண்ணீர்….!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று புழல் கூடுதல் காவல்துறை இயக்குநருக்குக் உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநரிடம் பரிந்துரை செய்தது.

ஆனால், அதன் மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது தொடர்பாக ஏழு பேரில் ஒருவரான ராபர்ட் பயஸ் புழல் கூடுதல் காவல்துறை இயக்குநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், எனது குழந்தை பாதுகாப்புடன் பிறந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் கருவுற்றிருந்த மனைவியுடன் உள்நாட்டுப் போர் நடந்த இலங்கையிலிருந்து 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். 21.05.1991 அன்று ஸ்ரீபெரும்பதூரில் நடந்த குண்டு வெடிப்பு எனது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது.

ஏற்கெனவே நான்கு மாதங்கள் முடிந்த பின்னரும் விடுதலை குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இது நான்கு மாத துன்பமோ அல்லது நான்கு ஆண்டுகள் துன்பமோ இல்லை. ஏறத்தாழ 28 ஆண்டுகளாக நீதி மறுக்கப்பட்டவர்களின் துன்பம். சிறையில் இருந்த கால கட்டத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன்.

நோய் வாய்ப்பட்டிருக்கும் என் தாயைப் பராமரிக்க இயலாத நிலையில் வாழ்கிறேன். என் மனைவியும் மகனும் தொலை தூரத்தில் அநாதைகளைப் போல் வாழ்கின்றனர்.

ஆகையால்தான் கடந்த 2017-ம் ஆண்டு கருணைக் கொலை வேண்டி தமிழக முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தேன்.

இதுபோல் நம்பிக்கைக்கும் அவ நம்பிக்கைக்கும் இடையில் தொடர்ந்து வாழ்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

எனவே, எனது விடுதலைக் குறித்து உலகத்தார்க்குச் சிலவற்றை சொல்ல விரும்புவதால் செய்தி ஊடகங்களைச் சந்தித்து பேச அனுமதி அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *