வழிபாட்டுத் தலமான ஆலயங்களை- வர்த்தக தளமாக மாற்றாதீர்!- ஆகம அணி

பெட்டாலிங் ஜெயா, மே.26- நாட்டில் உள்ள ஆலயங்கள் சில, இன்றைய சூழ் நிலையில் அவற்றின் நிர்வாகத்தினால் பணம் சம்பாதிக்கும் தளங்களாக பயன்படுத்தபட்டு வருகின்றன.

வழிபாடு தலங்களாகவும் சமூக சேவை மையங்களாகவும் இருக்க வேண்டிய அப்புனித இடங்களை தங்களின் சுய லாபத்திற்காக பயன்படுத்தும் தரப்பினர் மீது உரிய நேரத்தில் தக்க நடவடிக்கை முன்னெடுக்க இந்து சமய அரசு சாரா இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என மலேசிய இந்து ஆகம அணி அமைப்பின் தலைவர் அருண் துரைசாமி கேட்டுக் கொண்டார்.

இவ்வமைப்பு இன்று “ஆலயம் மற்றும் சமுதாய சேவை” எனும் மா நாட்டை நடத்தியது. பெட்டாலிங் ஜெயாவில் உள்ள சிவிக் செண்டர் அரங்கில் நடைபெற்ற இம்மா நாட்டில் ஆலயத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அவற்றை தடுக்க முன்னெடுக்க கூடிய வழிமுறைகள் குறித்த தமதுரையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இம்மாநாட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி, அண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினர் குணராஜ், முத்துக்குமார குருக்கள் ஆகியோர் வருகை புரிந்தனர்.

அவர்களுடன் இந்து சமய அரசு சாரா இயக்கங்களின் பிரதி நிதிகள், இந்து சமய ஆர்வளர்கள், ஆலய நிர்வாக பிரதி நிதிகள் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆலங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறிப்பாக பொருளாதார அம்சத்தில் நிகழும் தவறுகளை அடையாளம் காணும் முறைகள், அவற்றை சரி செய்வதற்கு முன்னெடுக்கக்கூடிய வழிமுறைகள் குறித்து
இம்மாநாட்டில் பேசப்பட்டது.

மேலும் பெட்டாலிங் ஜெயாவில் செயல்பட்டு வரும் இந்து சேவை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிமுக விழாவும் நடைபெற்றது.

தொடர்ந்து சிலாங்கூர், கூட்டரசு பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த ஆலயங்கள் தங்களின் சமுதாய சேவைத் திட்டத்தை தொடங்குவதற்கு தேவைப்படும் மானியங்கள் சார்ந்த தகவல்களும் அதனை பெறுவதற்கான வழிமுறைகளும் குறித்த விளக்கங்களும் வழங்கப்பட்டது.

இதனிடையே இம்மாநாட்டில் “தர்மா” நன்கொடை திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டது. . இந்த திட்டத்தில் ஆண்டுதோறும் கிடைக்கப்பெறும் நன்கொடைகள் வழி இந்து சமய வாழ்வியல் சார்ந்த கல்வி திட்டங்கள் பயிலும் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.

இந்து சமய இயக்கங்களில் முக்கிய பதவி வகிப்பவர்கள் இத்திட்டத்திற்கு பொறுப்பாளர்களாக விளங்குவர் என்றும் அருண் குறிப்பிட்டார்.

The post வழிபாட்டுத் தலமான ஆலயங்களை- வர்த்தக தளமாக மாற்றாதீர்!- ஆகம அணி appeared first on Vanakkam Malaysia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *