விடுமுறைக்கு பிள்ளைகளை அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு! ஜேர்மன் அரசு அதிரடி

ஜேர்மனியில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாமல் விடுமுறைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோருக்கு அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய பெற்றோரை விமான நிலையங்களில் கண்டறியவும், அவர்களை திருப்பி அனுப்பவும் பொலிசார் முனைப்பு காட்டி வருகின்றனர்.

பவேரியா மாகாணத்தில் இதுவரை 10 குடும்பங்களை கல்வித்துறை அதிகாரிகளிடம் விளக்கமளிக்கும்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாடசாலை செயல்படும் நிலையில் மாணாக்கர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் விடுமுறைக்கு அழைத்துச் செல்வது குற்றமாகும்.

மட்டுமின்றி பாடசாலை சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்படாமல் விடுமுறைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும்,

பெற்றோர்கள் கூறும் விளக்கம் போதுமானதாக இல்லை எனில் சுமார் 1000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் ஒவ்வொரு மாகானத்திலும் வெவ்வேறு சட்டங்கல் அமுலில் இருந்தாலும், கல்வித்துறை அறிவித்துள்ள அபராதமானது பொதுவாகும் என கூறப்படுகிறது.

சாக்சோனி பகுதியில் பாடசாலை செயல்படும் நாட்களில் 5 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுக்கும் மாணாக்கர்களின் பெற்றோருக்கு 1250 யூரோ அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

மட்டுமின்றி கடந்த ஓராண்டில் மட்டும் இதுபோன்ற 5680 வழக்குகள் ஜேர்மனி முழுவதும் பதிவானதாகவும், சுமார் 618,000 யூரோ அளவுக்கு அபராதம் திரட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியில் மட்டுமல்ல, அவுஸ்திரேலியாவிலும் பாடசாலை செயல்படும் காலகட்டத்தில் மாணவர்கள் விடுமுறை எடுத்துச் சென்றால் 110 முதல் 660 யூரோ வரை அபராதம் விதிக்கின்றனர்.