ஹர்திக் பாண்டியாவை 1999 உலகக்கோப்பை ஹீரோவுடன் ஒப்பிட்ட ஸ்டீவ் வாக்

1999 உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர் குளுஸ்னர் ஆதிக்கம் செலுத்தியதுபோல், தற்போது ஹர்திக் பாண்டியா ஜொலிப்பார் என்று ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்த உலகக்கோப்பையில் ஆல்-ரவுண்டர்கள் அதிக்கம் செலுத்துவார்கள் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அதில் முக்கிய நபராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது வீரராக களம் இறங்கிய பாண்டியா, 27 பந்தில் 48 ரன்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 352 ரன்கள் குவித்தது. இந்நிலையில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் குளுஸ்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நாக்அவுட் சுற்றில் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், தொடர் நாயகன் விருதை தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை குளுஸ்னருடன் ஒப்பிட்டார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக். ஹர்திக் பாண்டியா குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடிய அதிரடி ஆட்டம், மற்ற அணிகளுக்கு பீதியை கிளப்பியிருக்கும். 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் குளுஸ்னர் எப்படி செயல்பட்டாரோ, அதேபோல் ஹர்திக் பாண்டியா இந்த முறை ஆதிக்கம் செலுத்துவார். தனது அதிரடி ஆட்டத்தின்மூலம் போட்டியை சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் உள்ளது’’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *