10000 ரன்களை கடந்து சாதனை படைத்தார் டோனி

ஒரு நாள் போட்டியில் 10000 ஆயிரம் ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

சிட்னி மைதானத்தில் இன்று காலை முதல் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவிந்திருந்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவர் ரன் ஏதும் எடுக்காமலும், அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த விராட்கோஹ்லி 3 ரங்களிலும், அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாகி வெளியேறினர்.

இதனால் ரசிகர்கள் அனைவரும் பெரும் சோகத்தில் இருந்தபோது, அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி 4வது விக்கெட்டிற்கு களமிறங்கி பொறுமையான ஆட்டத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

தற்போது இந்திய அணி 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாபமான நிலையில் விளையாடி வருகிறது.

போட்டியின் இடையே ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமையினையும், இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையினையும் டோனி பெற்றார்.

இவருக்கு முன்னதாக டெண்டுல்கர் 18,426 ரன்கள், கங்குலி 11, 221 ரன்கள், திராவிட் 10,768 ரன்கள் மற்றும் விராத் கோஹ்லி 10,232 ரன்கள் எடுத்து முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல விக்கெட் கீப்பர்களில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில், இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா 404 போட்டிகளில் 14,234 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *