25 ஆண்டுகளாக கைவிடப் பட்ட ‘ஹைலண்ட் டவர்’ இடிக்கப்படும்!

கோலாலம்பூர், செப்.14- கடந்த 25 ஆண்டுகளாக கைவிடப் பட்ட நிலையில் இருந்து வரும் ‘ஹைலண்ட் டவர்’ அடுத்த மாதம் இடித்துத் தள்ளப் படும் என்று வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் ஜுரைடா கமாருடின் தெரிவித்தார்.

‘ஹைலண்ட் டவர்’ பகுதியில் மேம்பாட்டு நடவடிக்கைகள் நடத்தப் படுவதற்காக, கைவிடப் பட்டுள்ள குடியிருப்பு கட்டடங்கள், அம்பாங் ஜெயா மாநகரக் கழகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப இடித்துத் தள்ளப் படும் என்று அவர் கூறினார்.

கைவிடப் பட்டுள்ள அந்த வீடுகள் குறித்த தொழில்நுட்ப விவரங்கள், மற்றும் வீடுகளின் உரிமை நிலைகள் போன்றவற்றை அம்பாங் ஜெயா மாநகரக் கழகம் தான் கையாண்டு வருகிறது என்று ஜுரைடா சுட்டிக் காட்டினார்.

“கைவிடப் பட்டுள்ள நிலையில் உள்ள மீத கட்டிடங்கள் இடித்துத் தள்ளப் பட்டு, அப்பகுதியில் மேம்பாட்டு பணிகள் இவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப் பட வேண்டும் என்று நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம்.

“அந்தக் கட்டிடங்களை இடித்து தள்ளுவதில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதா என்பது நன்கு ஆராயப் பட்ட பின்னர், அக்கட்டிடங்கள் இடித்து தள்ளப் படும்” என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

கடந்த 1993-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதியன்று, உளு கிள்ளானில் உள்ள தாமான் ஹில்வீய் பகுதியுள்ள மூன்று ஹைலண்ட் டவர் கட்டிடங்கள் சரிந்து விழுந்த்தில், 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த இதர கட்டிடங்களில் வசிப்பது பாதுகாப்பற்றது என்று தெரிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து, அக்கட்டிடங்களில் வசித்த மக்கள், தங்களின் வீடுகளை கைவிட்டு வேறு இடங்களுக்கு குடி பெயர்ந்தனர்.

அப்பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் 150 வீடுகள் உள்ளதாக மலேசிய திவால் இலாகா தெரிவித்துள்ளது. அந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்கள் இடித்து தள்ளப் பட்டு, அங்கு பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப் படும் என்று கடந்த ஆகஸ்டு மாதம் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சு தெரிவித்தது.

The post 25 ஆண்டுகளாக கைவிடப் பட்ட ‘ஹைலண்ட் டவர்’ இடிக்கப்படும்! appeared first on Vanakkam Malaysia.