3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது: விஜய் சங்கர்

இந்திய கிரிக்கெட் நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய சொன்னது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். #NZvIND

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர் மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். அதன்பின் இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் பங்கேற்றார். நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடினார்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். அந்த இடத்தில் அவர் சிறப்பாக விளையாடினார். முதல் போட்டியில் 23 ரன்கள் அடித்த அவர், கடைசி போட்டியில் 28 பந்தில் 43 ரன்கள் விளாசி அனைவரது பார்வையையும் ஈர்த்தார்.

இந்நிலையில் இந்தியா திரும்பியுள்ள அவர், அணி நிர்வாகம் 3-வது இடத்தில் களம் இறக்கியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் சங்கர் கூறுகையில் ‘‘அணி நிர்வாகம் என்னை 3-வது இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்யுங்கள் என்று கூறியது மிகப்பெரிய வியப்பாக இருந்தது. சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தபடி விளையாடுவதில் கவனம் செலுத்தினேன். இந்தியா போன்ற அணிக்காக விளையாடும்போது, எல்லா விதங்களிலும் விளையாட தயாராக இருக்க வேண்டும்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர் முழுவதில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். நான் அதிக அளவில் பந்து வீசவில்லை. ஆனால், வித்தியாசமான சூழ்நிலைகளில் பந்து வீச கற்றுக் கொண்டேன். விராட் கோலி, ரோகித் சர்மா, டோனி எப்படி பேட்டிங் செய்கிறார்கள் என்பதை பார்த்தேன். அதில் இருந்து பலவற்றை கற்றுக் கொண்டேன்.

என்னைப் பொறுத்தவரையில் கடைசி போட்டி கூட கற்றுக் கொள்வதற்கான அனுபவம்தான். இன்னொரு பவுண்டரியை விட ஒன்று அல்லது இரண்டு ரன்களுக்கு முயற்சி செய்திருக்கனும். நான் எப்போதும் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்றுதான் விரும்பிவேன். அணிக்காக என்னால் வெற்றியை தேடிக்கொடுக்க முடியும் என்றால், தானாகவே அது என்னுடைய தனிப்பட்ட ஆட்டத்தை வளர்க்கும்.

என்னைப் பொறுத்தவரைக்கும், முக்கியமான விஷயம், வித்தியாசமான சூழ்நிலைக்கு ஏற்ப விரைவாக மாறி தொடர்ச்சியாக ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *