இலங்கையின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், கடும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் வறட்சியால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலர் பிரிவில் 14 ஆயிரத்து 748 பேர் வறட்சியால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பான மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கவேண்டிய மழை வீழ்ச்சியும் போதியளவு கிடைக்கவில்லை. இதனால் கடந்த வருடத்திலிருந்து எமது மாவட்டம் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர், மருதங்கேணி போன்ற பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறு பாதிப்படைந்த தீவகப் பகுதிகளுக்குக் குடிதண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

பாதிப்படைந்த பகுதிகளின் குடிதண்ணீர் விநியோகத்துக்கு கொழும்பு இடர் முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் 6 பவுசர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் ஊடாகப் பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் குடிதண்ணீர் பவுசர்களுக்கான எரிபொருள் செலவுகள், சாரதிகளுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றையும் கொழும்பு இடர் முகாமைத்துவ அமைச்சே பொறுப்பேற்றுள்ளது” – என்றார்.

கருத்துக்கள்

avatar
wpDiscuz