ரஜினிகாந்த் காலா பட சண்டை காட்சிகள்

ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படம் ‘காலா’. ‘கபாலி’க்கு பிறகு இந்த படத்திலும் அவர் தாதாவாக நடிக்கிறார். திருநெல்வேலியில் இருந்து பிழைப்பு தேடி மும்பை செல்லும் அவர் ரவுடிகள் தொல்லையில் சிக்கி தவிக்கும் தமிழர்களை பாதுகாக்க தாதாவாக மாறுவது போல் திரைக்கதை அமைத்துள்ளனர்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து முடிந்தது. ரஜினிகாந்த் தாராவி பகுதியில் மோட்டார் சைக்கிள் பின்னால் உட்கார்ந்து வீதிவீதியாக சென்று மக்கள் குறைகள் கேட்பது போன்றும், ரவுடிகளை அடித்து விரட்டுவது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பை காண ரசிகர்கள் திரண்டதால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அதன்பிறகு ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதற்காக அமெரிக்கா சென்று 2 வாரங்கள் தங்கினார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் ரஜினிகாந்த் நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். பின்னர் அவர் சென்னை திரும்பி மீண்டும் ‘காலா’ படப்பிடிப்பில் கலந்துகொள்ள தயாரானார்.

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மும்பை தாராவி பகுதியை அரங்காக அமைத்துள்ளனர். அங்கு காலா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு நடித்தார். நேற்றும், நேற்று முன்தினமும் ரஜினிகாந்த் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. வில்லன்களுடன் அவர் ஆக்ரோஷமாக மோதும் சண்டை காட்சிகளும் படமானது.

இதில் ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களும் கலந்துகொண்டு நடித்தார்கள். இங்கு ஒரு மாதம் வரை படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகளும் இதே அரங்கில் படமாக்கப்படுகிறது.

இந்த வருடம் இறுதியில் ‘காலா’ படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். கதாநாயகியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டீல், சுகன்யா, ஈஸ்வரிராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பா.ரஞ்சித் இயக்குகிறார்.


கருத்துக்கள்

avatar
wpDiscuz