ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள கெய்ல், பிராவோ

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, கீரன் பொல்லார்டு, சுனில் நரைன் ஆகியோர் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துடன் மோதல் ஏற்பட்டதால், டி20 கிரிக்கெட் போட்டியை தவிர மற்ற விளையாட்டுகளில் பங்கேற்க முடியாமல் இருந்தனர்.

அதற்குக் காரணம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின்படி ஒரு வீரர் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டுமென்றால், அந்த விளையாட்டின் தொடர்புடைய உள்நாட்டு தொடர்களில் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால்தான் சர்வதேச அணியில் இடம்பெற முடியும்.

கெய்ல், பிராவோ, பொல்லார்டு, அன்ட்ரே ரஸல் ஆகியோர் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவது கிடையாது. அவர்கள் அனைவரும் ஒவ்வாரு நாடுகளும் நடத்தும் டி20 லீக் தொடரில் ஆர்வம் காட்டினார்கள்.

இதனால் சிறந்த வீரர்களை வைத்துக் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதுப்புது வீரர்களை களம் இறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் படுதோல்விகளை சந்தித்து வருகிறது. 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாக தகுதி பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களின் சங்கம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என்று வீரர்கள் சங்கம் பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் வீரர்களை விளையாட அனுமதிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வீரர்கள் பங்கேற்கும் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக விரைவில் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கெய்ல், பிராவோ, பொல்லார்டு, சுனில் நரைன் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சுமார் 15 மாதங்கள் கழித்து இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்கள்

avatar
wpDiscuz