கோலாலம்பூர், ஆகஸ்ட்.10- முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்புக்கு எதிரான விசாரணை குறித்த தகவல்கள் ஊடகங்களில் பிரசுரிக்கப் படுவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சமர்ப்பித்திருந்த மனுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தள்ளுபடி செய்தார்.
நஜிப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ள வேளையில், அது தொடர்பான வழக்குகள் குறித்து ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகள், நஜிப்பின் வழக்கைப் பாதிக்கும் என்பதால், ‘gag order’ எனப்படும் இடைக்கால ஒழுங்குமுறை உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நஜிப்பின் வழக்கறிஞர் விண்ணம் செய்திருந்தார்.
ஆனால், அது பேச்சுரிமைக்கு முரணாக இருப்பதால், அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி நீதிபதி முகமட் நஸ்லான் இத்தீர்ப்பை அளித்தார்.
இந்நிலையில், இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவிருப்பதாக நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஶ்ரீ முகமட் ஷாப்பி அப்துல்லா தெரிவித்துள்ளார்.