கச்சதீவு திருவிழா பயண ஏற்பாடுகள் பூர்த்தி!

  • 4 days ago
  • 0 0

எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா குறித்த அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 7ம் திகதி பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில், கச்சதீவிற்கு யாத்திரிகர்கள் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (14) காலை நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், பொலிஸ் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள், இராணுவத்தினர், அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைசார்ந்த அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள், நீதிமன்ற அதிகாரிகள், இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, மார்ச் மாதம் 6ஆம் திகதி அதிகாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை கச்சதீவிற்குச் செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் தனியார் பேருந்து தரிப்பிடத்தில் இருந்தும் குறிகட்டுவானுக்கான போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிகட்டுவானில் இருந்து, கச்சதீவிற்கான படகுச் சேவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிகட்டுவானில் இருந்து கச்சதீவிற்கான ஒருவழி படகுச் சேவைக் கட்டணமாக 325 ரூபாயும், நெடுந்தீவில் இருந்து கச்சதீவிற்கான கட்டணமாக 250 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் கச்சதீவில் உணவு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்வதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து மற்றும் யாத்திரிகர்கள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் கடற்படை மற்றும் பொலிஸாருடன் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *