டோனியால் தொடர்ந்து விளையாட முடியும் – கிரிக்கெட் வாரிய உறுப்பினர் கருத்து

  • 5 months ago
  • 0 0

டோனிக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருப்பதாகவே கருதுகிறேன் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினரான டயானா எடுல்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியின் உறுப்பினருமான டயானா எடுல்ஜி அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி சிறப்பாக விளையாடியது. துரதிர்ஷ்டவசமாக அரைஇறுதி ஆட்டம் 2-வது நாளுக்கு சென்று ஏமாற்றத்தில் முடிந்து விட்டது. ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது முற்றிலும் பின்னடைவாகி விட்டது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜாவும் (77 ரன்), டோனியும் (50 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டெடுக்க போராடிய விதம் மெச்சத்தகுந்தது.

இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் டோனி விளையாடிய விதம் பாராட்டுக்குரியது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விஷயம். இந்த முடிவை அவர் மட்டுமே எடுக்க முடியும். அவரது உடல் ஒத்துழைப்பு தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும். ஆனாலும் அவருக்கு இன்னும் நிறைய கிரிக்கெட் வாழ்க்கை எஞ்சியிருப்பதாகவே கருதுகிறேன். இளம் வீரர்களுக்கு அவரது ஆலோசனை இன்னும் தேவைப்படுகிறது’ என்றார்.

இதற்கிடையே இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அளித்த பேட்டியில், ‘டோனியின் ஓய்வு தொடர்பாக நிறைய தகவல்கள் வருகின்றன. ஆனால் ஓய்வு விஷயத்தை அவரது முடிவுக்கே விட்டு விட வேண்டும். யூகங்களுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்த்து அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்புக்கு ஒவ்வொருவரும் மரியாதை கொடுக்க வேண்டும்’ என்றார்.

Related Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *