திமுக தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி? கட்சி விதி என்ன சொல்கிறது?

  • 2 years ago
  • 0 0

திமுக தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 7 ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு தொண்டர்களும், பொதுமக்களும் வரிசையில் நின்று தினமும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், திமுக அவசர செயற்குழுக் கூட்டம் வரும் 14-ம் தேதி கலைஞர் அரங்கில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் திமுக-வின் அடுத்த தலைவராக, செயல் தலைவர் ஸ்டாலினை தேர்ந்தெடுப்பது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அழகிரியை மீண்டும் இணைப்பது, கனிமொழி உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்புகளை வழங்குவது உள்ளிட்ட விவகா ரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகக் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே செயற்குழுக் கூட்டம் கூடவுள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக செயல்தலைவர் ஸ்டாலினும் கூட இரங்கல் தெரிவிக்கத்தான் கூட்டம் என்று பேட்டியளித்தார். 

தலைவர் தேர்வு செய்யப்படுவது எப்படி?

திமுகவில் அதன் தலைவரை பொதுக்குழுதான் முடிவு செய்து தேர்ந்தெடுக்கும். தி.க.வில் இருந்து விலகிய அண்ணா, 1949-ஆம் ஆண்டு திமுக வை தொடங்கினார். அரசியல் கட்சியாக மாறிய திமுக, 1957 முதல் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா இருந்தார். அண்ணா 1969-ல் காலமான பிறகுதான் திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்து திமுகவை வழிநடத்தி வந்த கருணாநிதி, சமீபத்தில் மறைந்துள்ளார்.

திமுக கட்சி விதிப்படி, தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் காலியானால், 60 நாட்களுக்குள் பொதுக்குழு கூடி புதிய நிர்வாகி களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை பொதுச்செயலாளர் வெளியிடுவார். திமுகவின் பொதுக்குழுவில் வாக்கெடுப்பு நடை பெற்று இதற்கான முடிவு எடுக்கப்படும்.

வரும் 14-ம் தேதி நடக்கும் செயற்குழுவில், பொதுக்குழுவை எப்போது கூட்டுவது என முடிவு செய்யப்படலாம். செப்டம்பர் முதல் வாரம் பொதுக்குழு கூடும் என்றும் அதில் திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *